சித்தாண்டி பாடகர் குமாரசாமி அவர்களின் ஒலிப்பேளை

சித்தாண்டி கிராமம் பல்துறை சார்ந்த பலரை ஈன்றெடுத்த மண் என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 'பக்திரதக் கவிமணி' , 'பக்திப் பாமாலை பாகவதர்'  ஆகிய பட்டங்களைப் பெற்ற திரு.பொன்னம்பலம் - குமாரசாமி  அவர்களையும் அவருடைய பாடலையும் அறிமுகம் செய்து வைப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.


பிரதேச மக்களால் புலவர் குமாரசாமி என்றழைக்கப்படும் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டளவில் சித்தாண்டி பிரதேச ஆலயங்களின் பெருமை கூறும் 'சித்தாண்டியின் ஆலயங்கள்' எனும் பாடல் ஒலிப்பேளை ஒன்றை வெளியிட்டிருந்தார். நாடக இயக்குனர், நுலாக்கம் , சோதிடர் போன்ற பல திறமைகளைக் கொண்ட புலவர் குமாரசாமி அவர்கள், சக்திகலாமன்றம் என்னும் நாடக மன்றத்தை சித்தாண்டி - வினாயகர் கிராமத்தில் உருவாக்கியவராவார்.

1991 ஆம் ஆண்டுகளிலிருந்தே தமது பாடல் எழுதும் துறையில் ஈடுபட்ட புலவர், பல வருடங்களாக தமது பாடல்களை ஆலயங்களிலும், இசைநிகழ்ச்சிகளிலும் பாடிவந்துள்ளார். ஆனால் 2004 ஆம் ஆண்டிலேலேயே தமது பாடல்களை இசையமைத்து ஒரு ஒலிப்பேளையாக வெளியிடக்கூடிய வாய்ப்பினைப் பெற்றார். தனது பாடல் ஒலிப்பேளையினை ரூபாய் 50000 செலவு செய்து உருவாக்கியிருந்தார். ஏறாவூர் ஐயங்கேணி இசைக்குழுவினர் இவருடைய பாடல்களுக்கு இசையமைத்திருந்தனர்.

இவர் 1992 ஆம் ஆண்டளவில் சித்தாண்டி – மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பரிபாலனை சபையினரின் ஏற்பாட்டில் போரதீவு காளிகோவில் ஆலய காந்தன் குருக்கள் என்பவரால் 'பக்திரதக் கவிமணி' எனும் பட்டம் வழங்கப்பட்டும், காளி அம்மன் ஆலய பூசகர் திரு. சத்தியநாதன் அவர்களால் 'பக்திப் பாமாலை பாகவதர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

திருமுருகாற்றுப்படை – காவடிப்பாடல், நாககன்னியம்மன் காவியம் ஆகிய இருநூல்களை கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்துள்ள இவர் விரைவில் அதனை நூல்வடிவில் வெளியிடுவதற்கு பொருளாதாரப் பிரச்சினை தடையாகவுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பல பாடல்களை மிக சிறப்பாக இயற்றி வைத்துள்ள அவர் அதனை இசையமைத்து வெளியிடுவதற்கும் பொருளாதார வசதி தடையாகவுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். தமது கலைப்படைப்புக்களை வெளிக்கொண்டுவருவதற்கு பணவசதி படைத்தவர்களின் உதவியினை வேண்டிநிற்கின்றார்.

எமது பிரதேசத்தில் இத்தகைய திறமையுடையவர்கள் மிக அருமையாக உள்ளமையினால் இத்தகையவர்களின் கலைத்திறைமைகளை எமது பிரதேசத்தவர் என்ற உணர்வுடன் போற்றிபாராட்டுவதுடன், அவருடைய வளாச்சிக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும்.




தொடர்புகளுக்கு:-
திரு. பொன்னம்பலம் - குமாரசாமி (புலவர் குமாரசாமி)
வினாயகர் கிராமம், சித்தாண்டி-01,
மட்டக்களப்பு



'சித்தாண்டியின் ஆலயங்கள்'  ஒலிப்பேளை பாடல்கள்





Previous Post Next Post