மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களுள் வாகரை பிரதேசமும் ஒன்றாகும். வாகரை பிரதேசமானது பல்வேறு வளங்களையும் கொண்ட ஒரு பிரதேசமாகக் காணப்படுகின்றபோதிலும் இங்கு வறுமை நிலை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாத நிலைமையே காணப்படுகின்றது.
வாகரைப் பிரதேசத்தின் பௌதீக வளங்களின் தன்மை, சமூக பொருளாதார நிலைமைகள், வறுமையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள், வறுமையினைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவானது வடக்கே வெருகல் பிரதேச செயலாளர் பிரிவினையும், மேற்கே வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவினையும், தெற்கே கோரளைப் பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவினையும், கிழக்கே வங்கக் கடலையும் எல்லையாகக் கொண்டு காணப்படுகின்றது.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மொத்தக் கிராமங்களின் எண்ணிக்கை 45 ஆகவும், மொத்த கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை 16 ஆகவும் காணப்படுகின்றது. இங்கு மொத்தமாக 7165 குடும்பங்கள் வாழ்வதுடன், மொத்தச் சனத்தொகையாக 24064 பேரும் உள்ளனர். இங்கு ஆண்களை பெண்கள் அண்ணளவாக 3 சதவீதத்தினால் அதிகமாகும்.
மக்களின் பொருளாதார நடவடிக்கைளை நோக்குகின்றபோது விவசாயம், மீன்பிடி, விறகு சேகரித்தல் மற்றும் சிறு வியாபாரங்கள் மற்றும் சிறுதொகை அரச தொழிலாளர்கள் எனக் காணப்படுகின்றது. பெருமளவிலானோர் நிலத்தையும், நீர்நிலைகளையுமே நம்பியவர்களாகக் காணப்படுகின்றனர். அதாவது விவசயம் மற்றும் மீன்படி சார்ந்த நடவடிக்கைகளிலுமே அதிகமானோர் ஈடுபடுகின்றனர். மீனபிடித் தொழிலை 47 சதவீதமானோரும், கூலித்தொழில் செய்வோர் 23 சதவீதமானோரும், விவசாயம் செய்வோர் 18 சதவீதமானோரும், சிறுமுயற்சியாளர்கள் 10 சதவீதமானோரும், அரச சேவையிலுள்ளவர்கள் 2 சதவீதமாகவும் உள்ளனர்.
சமதரையான நிலமும், கடற்கரைச் சமவெளியையும் கொண்டுள்ளதுடன், ஆற்று வடிநிலப் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. வாகரைப் பிரதேசத்தின் மண்வளத்தினை அவதானிக்கின்றபோது, வாகரையின் கிழக்கு கடற்கரையோரம் சார்ந்த பகுதி றெகோசோல்ஸ் எனப்படும் அண்மைக்கால மணல் மண்ணையும், பிரதேசத்தின் தென்மேற்கு பகுதி கல்சியமற்ற கபில நிற மண்ணையும், பிரதேசத்தின் மத்திய பகுதி சொலோடைஸ் சொலோநெற்ஸ் எனப்படும் உவர்நில மண்ணையும், ஏணைய பெரும்பாலான பகுதிகள் வளமான வண்டல் மண்ணையும் கொண்டுள்ளன.
நெற்பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான வண்டல் மண், சமதரை மற்றும் நீர் வளம் என்பன காணப்படுவதனால் நெற்பயிர்ச்செய்கை இங்கு சாத்தியமாகின்றது. அதேபோன்று மழையை நம்பிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை குறிப்பாக நிலக்கடலை, சோளம் முதலிய பயிர்ச்செய்கைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. கல்சியமற்ற கபிலநிறமண் கொண்ட பகுதிகள் நிலக்கடலைக்குப் பொருத்தமான மண்ணாக இருப்பதுடன், இம்மண்ணில் கூடிய விளைச்சலையும் பெறக்கூடியதாகவுள்ளது. கடறகரையை அண்டிய பகுதிகளில் தென்னைவளாப்பின்மூலமும் இலாபம் பெறப்படுகின்றது.
கடல் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகள் காணப்படுவதனால் மீன்பிடி மற்றும் இறால் பிடித்தல் என்பன சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்து. நன்னீரும், உவர்நீரும் கலக்கின்ற பனிச்சங்கேணி பான்ற பல பகுதிகள் இங்கு அமைந்துள்ளதுடன், அங்கு கண்டல் வகை தாவரங்கள் அதிகமாகக் காணப்படுவதும் இறால் போன்றவற்றின் வளர்ச்சி அதிகமாகக் காணப்படுகின்றது. இலங்கையிலே பிடிக்கப்படுகின்ற இறால்களில் மிகவும் சுவையானதும், பிரபல்யமானதுமான இறால் வாகரைப் பிரதேசத்திலிருந்தே பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடல் மீண்பிடியிலும் வாகரை பிரதேசம் சாதகமாக நீண்ட கடற்கரையினைக் கொண்டு காணப்படுகின்றது. ஆழம் குறைந்த கடற்பரப்புக்களைக் கொண்டமையாலும் ஆற்றுமுகங்களைக் கொண்டமையாலும் அதிகளவில் இங்கு மீன் பிடிபடுகின்றது. இவ்வாறு வளம்மிக்க பல பகுதிகளைக் கொண்ட பிரதேசம் வறுமையினால் பீடிக்கப்படுவதற்கு காரணம் என்ன? என ஆராய்கின்றபோது சில அடிப்படையான காரணங்கள் தெளிவாகப் புலப்படுகின்றன.
வாகரைப் பிரதேசத்தின் வறுமைக்கான காரணங்கள்.
வாகரைப் பிரதேசத்தின் வறுமை நிலைக்கு அடிப்படைக் காரணம் கல்வியறிவு குறைவே என்றால் அது மிகையில்லை. இலங்கையின் தேசிய நாடுதழுவிய ரீதியிலான கல்வியறிவு வீதம் 92 சதவீதமாகக் காணப்படுகின்ற அதேவேளை வாகரை பிரதேசத்தின் கல்வியறிவு வீதம் 56 சதவீதமாகக் காணப்படுகின்றது. இதேவேளை இங்கு பல்கலைக்கழக அனுமதி பெறுவோரின் அளவானது பரீட்சைக்குத் தெர்றுகின்ற மொத்த மாணவர்களில் 1 சதவீமாகக் காணப்படுகின்றது.
ஒரு பிரதேசத்தின் பொரளாதார வளர்ச்சி நிலையைத் தீர்மானிக்கின்ற சமூக பொருளாதாரக் காரணிகளுள் கல்வியின் முக்கியத்தும் அவசியமானதாகும். இங்கு கல்வி வளாச்சியில் பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக இருக்கின்றபோதிலும், போசாக்கின்மையும் முக்கிய காரணமாகின்றது. குறிப்பாக சிறுவர் பராயத்தில் ஒரு குழந்தை போசாக்கான நிலையில் உள்ள போதூன் அதனுடைய மூளைக்கலங்கள் விருத்தியடைவதுடன், நினைவாற்றல் விருத்தியும் ஏற்படுகின்றது. ஆனால் வாகரைப் பிரதேசத்தில் 5 வயதிற்குட்பட்ட குறைபோசாக்குடைய குழந்தைகளின் எண்ணிக்கை 27.3 சதவீதமாகக் காணப்படுகின்றது. இதனால் மாணவர்களின் ஆரம்பக் கல்வியே ஒழுங்கின்றி அமைகின்றபோது இங்கு கல்வி நிலை கோள்விக்குறியாகின்றது.
கல்வித்தரம் குறைவடைகின்றபோது அது பொருளாதாரத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. குடும்பத்தில் அரச துறையில் தொழில்வாய்ப்போரின் எண்ணிக்கையினை குறைவடையச் செய்வதுடன், விவசாயம் மற்றும் மீன்பிடி முதலியவற்றில் நவீன தொழிநுடப்ஙக்ள் மற்றும் முகாமைத்துவ சிந்தனைகள் தொடாபான மாற்றங்களை கொண்ட வருவதற்கு தடையை ஏற்படுத்துகின்றது. கல்வியறிவு குறைவினால் வாகரை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சில விடயங்கள்.
• கல்வியறிவின்மையினால் விவசாய நடவடிக்கைகளில் நவீன நுட்பங்களை பின்பற்ற முடியாமை.
• இடைத்தரகர்களினால் குறைந்த விலையில் தமது உற்பத்திகளை வி;பனை செய்கின்றமை.
• தொழில் மற்றும் சேமிப்பு தொடர்பான தெளிவான விளக்கங்களை பெமுடியாமை.
• வீண்செலவு மற்றும் மதுபாவனை போன்றவற்றில் தமத வருமானத்தை செலவிடல்.
• புதிய முதலீடுகளை அல்லது சந்தைக்கேற்ற வகையிலான உற்பத்திகளை தெரிவு செய்யமுடியாமை.
வாகரைப் பிரதேசத்தின் வறுமை நிலையில் பிரதானமாக கல்வித்தரம் குறைவு என்பது அடிப்படையான காரணியாக இருக்கின்அதேவேளை வேறு சில காரணிகளையும் அவதானிக்கலாம்.
வாகரைப் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான நிலைகள் காணப்படுகின்றபோதிலும் சில முகாமைத்துவ முகைள் இன்மையினால் விவாயத்தின் மூலம் இலாபமீட்ட முடியாதுள்ளது. குறிப்பாக விவசாயம் செய்வதற்கு பரந்த நிலப்பரப்பு காணப்படுகின்றது. ஆனால் விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பரப்பு குறைவாகும். அத்துடன் பலர் நவீன விதையினங்கள் மற்றும் விவாசாய அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளை பின்பற்றுவதும் குறைவாகும். வீட்டுத்தோட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இடைத்தரகர்களினால் சுரண்டப்படுவதும் இங்கு காணப்படுகின்ற ஒரு நிலைமையாகும். குறிப்பாக வாகரைப் பிரதேசத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி, சோளம், நிலக்கடலை முதலியவற்றை மிகவும் குறைந்த விலையில் உற்பத்தியாளாகளிடமிருந்து இடைத்தரகர்கள் பெற்றுக்கொள்கின்னறனர். இதனால் விவசாயிகளுக்கு மேலதிக இலாபம் கிடைப்பது தடை செய்யப்படுவதுடன், தமது உடல் உழைப்பிற்க மட்டுமான கூலிமட்டுமே கிடைக்கின்றது. அவர்களுக்கு கிடைக்கவிருக்கின்ற வருமானத்தினை இடைத்தரகர்கள் பறித்துவிடுகின்றனர்.
மீன்பிடி நடவடிக்கைகளில் பெருமளவிலானோர் ஈடுபடுகின்ற போதும் வறிய நிலையிலேயே பெருமளவிலான மீனவர்கள் காணப்படுகின்றனர். இதற்கும் இடைத்தரகர்களின் நடவடிக்கைகள் மற்றும் தமது பொருளுக்கு நியாயமான விலை கிடைக்காமை போன்ற காரணிகளும் காணப்படுகின்றன.
மூலதனப் பற்றாக்குறையும் வாகரை பிரதேசத்தவர்களின் வறுமை நிலைக்கு முக்கிய காரணமாகும். எந்தவொரு தொழில் நடவடிக்கைக்கும் மூலதனம் அடிப்படையானதாகும். வாகரைப் பிரதேசத்திலுள்ளவர்கள் விவசாயத்திலோ அல்லது ஏதாவது சிறுவியாபார நடவடிக்கைகளையோ தொடங்குவதற்கு தேவையான அடிப்படை மூலதனத்தை கொண்டிராமையினால், கடன் பெற்றே தொழிலில் ஈடுபடுகின்றனர். சிலர் கடன் கிடைக்காத நிலையில் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதேவேளை கடனைப் பெற்று விவசாயமோ அல்லது வேறு தொழில் நடவடிக்கைகளிலோ ஈடுபட்டால் அத்தொழில் நட்டமடைகின்றபோது கடனிலிருந்து மீளமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
வாகரைப் பிரதேச செயலகத்தில் உள்ள மக்களின் வறுமை நிலையைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகள்
வாகரைப் பிரதேசத்தில் உள்ள மக்களின் வறுமை நிலையினைக் கருத்திற்கொண்டு பல்வேறு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இத்தகைய உதவிகளை வரவேற்கவேண்டும். ஆனால் மக்களின் வறுமை நிலையினைப் போக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு அவர்களை மேலும் வறுமைக்குள் தள்ளுகின்ற நிலையினை உருவாக்கிவிடாது தமது உதவிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மக்களுக்கு தேவையான உணவு வகைகளை மாத்திரம் வழங்குபுவதன் ஊடாக வறுமையைக் குறைத்துவிடமுடியாது. குறிப்பாக இதன் மூலம் தொடர்ந்தும் அவர்கள் தொண்டர் நிறுவனங்களையே தங்கியிருக்கும் மிகவும் மோசமான நிலையை உருவாக்கும். அதாவது மக்களை தமது செர்த முயற்சியில் நம்பிக்கை வையாது பிறிதொருவரை நம்பியிருக்கவேண்டிய நிலையை உருவாக்கும். உதவிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு ஒரு சீனப்பழமொழியை இங்கு குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். 'ஒருவனுக்கு மீனைக் கொடுபப்தைவிட அதைப் பிடிப்பதற்குரிய வழிமுறையை கற்றுக்கொடுப்பதே சிறந்த உதவி' இங்கு மீனை ஒருவருக்கு ஒருநேரம் உணவுக்காக வழங்கினால் அடுத்த தடவையும் அவருக்கு மீனை இன்னும் ஒருவர்தான் வழங்கவேண்டும். ஆனால் அதனைப் பிடிப்பதற்குக் கற்றுக்கொடுத்தால் தனக்கு தேவை ஏற்படுகின்றபோது அவராலே அதனை அடையமுடியும். இத்தகைய விதத்தில்தான் வாகரை பிரதேச மக்களின் வறுமை நிலை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் அமையவேண்டும்.
வாகரை பிரதேச மக்களின் வறுமைக்கான அடிப்படைக் காரணிகள் அடையாளம் காணப்பட்டு அவை தீர்க்கப்படவேண்டும். அதாவது வறுமையின் ஊற்று எ;கிருக்கின்றது என்பபதை கண்டு அதனை மறைத்து விட முயலவேண்டும். குறிப்பாக வாகரை பிரதேச மக்களின் வறுமைக்குரிய அடிப்படைக் காரணிகளில் கல்வி நிலை மற்றும் போசாக்கு என்பன முக்கியமானவைலயாகும். இங்கு போசாக்கு நிலையை நிவர்த்தி செய்வதற்கு உவை வழங்குவதைத் தவிர்த்து அதனை தாமே உற்பத்தி செய்வதற்குரிய வழிமுறைகள் தெரியப்படுத்தவேண்டும்.
கல்வி நிலையினை உயர்த்துவதற்குரிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு கல்வி சார் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவாகள், பெற்றோர் முழுமையாக கரம்கோர்த்து செயற்படவேண்டும். பாடசாலைகளுக்கு மாணவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதனை பெற்றோர்களும் பாடசாலை ஆசிரியாகளும் கவனத்தில் கொள்ளப்படல்வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கல்வி ரீதியாக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்வதன் மூலம் மாணவர்களின் கல்வி விருத்திக்குப் பங்களிக்கலாம். மேலதிக செயற்றிட்டங்கள் மூலம் செயற்றிட்ட வகுப்புக்களை நடாத்துதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம், தற்போதைய நிலையில் குறிப்பிட்ட பிரதேசங்களில் சில தனியார் கல்விநிலையங்கள் பிரத்தியேக வகுப்புக்களை மேற்கொண்டு வருமாயின் அத்தகைய தனியார்கல்வி நிலையங்களின் வகுப்புநடவடிக்கைகளும் பாதிக்கப்படாத வகையில் செயற்றிட்டங்கள் இடம்பெற வேண்டும். தனியார் கல்விநிலையங்களும் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு அவசியமானதொன்றாகும். எனவே கல்வி விருத்திக்கு எங்கிருந்தெல்லாம் உதவி கடைக்கின்றதோ அவற்றை ஒருவிதத்திலும் ஒருவருடைய நடவடிக்கை பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்வது சிறந்ததாகும்.
வாகரைப் பிரதேசத்தில் உள்ளவர்களின் குறிப்பாக சிறுவர்களின் போசாக்கு நிலையினை உயர்த்தவதற்கு வழியே;படுத்தப்பட வேண்டும். ஏனெனில் மூளை வளர்;ச்சி, நினைவாற்றல் என்பவற்றுடன் போசாக்கு நிலை நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே போசாக்கினை மேம்படுத்த மக்களுக்கு போசாக்கு பற்றிய தெளிவூட்டல் முதலில் அவசியமாகும். ஏனெனில் எந்த உணவில் எத்தகைய போசனைகள் உள்ளது என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும்.
மூலப்பொருளாக அன்றி முடிவுப்பொருளாக பொருட்களை சந்தைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். குறிப்பாக நெல், மீன் முதலியவற்றை வாகரை பிரதேசத்திலுள்ளவர்கள் குநை;த விலையில் விற்பனை செய்துவிட்டு, தமது பொருளையே அரிசியாகவோ அல்லது மீனைக் கருவாடாகவோ வாழைச் சேனை போன்ற வெளிப்பகுதியிலிருந்து பெற்றுச் செல்கின்றனர். ஆனால் இவற்றை மட்டுப்படுத்தி குறிப்பாக அரிசி ஆலை மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை போன்றவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் நேரடியாக சந்தையில் முடிவுப்பொருளை விற்பனை செய்யமுடிவதுடன், இலாபமும் பெறமுடியும்.
எனவே வாகரைப் பிரதேசம் தமிழர்கள் செறிந்துவாழும் ஒரு பாரம்பரிய பிரதேசமாகும். இங்கு வறுமை நிலை குறைக்கப்பட்டு பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் முன்னேற்றம் பெற அணைவரும் பாடுபடவேண்டும்.
B.S. அக்சயன் [ BA (Hons) special in Geography ]