எனது கிராமம் சித்தாண்டி - தொடர் 02

3.முழுதளாவிய அணுகுமுறையில் சித்தாண்டி
    நான் எனது கிராமமான சித்தாண்டிப் பிரதேசத்தினை முழுதளாவிய அணுகுமுறையில் ஆய்வுக்குட்படுத்தவுள்ளேன். இதன் மூலம் சித்தாண்டிப்பிரதேசத்தின் பல அம்சங்கள் வெளிக்கொணரப்படும். அத்துடன் சித்தாண்டிப் பிரதேசத்தின் கலாசார, பண்பாட்டம்சங்களும், மக்களது பழக்க வழக்கங்களும், நடைமுறைகள், மொழிப்பயன்பாடுகள் என்பனவும், அவர்களது குறை நிறைகள் என்பனவும் வெளிக்கொணரப்படும்.
3.1    கிராமத்தின் வரலாறு
    வரலாறு என்பது கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை மீட்டிப்பார்ப்பது ஆகும். கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை காட்டும் கண்ணாடியாக வரலாறு விளங்குகிறது. சில குடியேற்றங்கள் அமையப்பெறுவது சில வரலாற்று நிகழ்வுகளுடாகவேயேயாகும். அந்தவகையில் எமது கிராமமும் ஒரு குடியேற்றக்கிராமமாகவே காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்கு மக்கள் வாழ்ந்திருக்கவில்லை. பின்னர்தான் மக்கள் இங்கு குடியிருப்புக்களை அமைத்துள்ளார்கள். இங்கு மக்கள் குடியேற்றங்கள் இடம்பெற்றது ஒரு சுவாரசியமான வரலாற்று நிகழ்வினூடாகவாகும். அதனை பின்வருமாறு பார்ப்போம்.
    ஆரம்பகாலத்தில் இங்கு மனித குடியிருப்புக்கள் காணப்படவில்லை. அதற்கு காரணம் இப்பிரதேசத்தினூடாக சந்தனமடாற்றின் கிளையாறு பாய்வதன் காரணமாக இங்கு அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதும், மற்றும் இப்பிரதேசம் ஒரு தாழ்வான பிரதேசமாகவும் காணப்பட்டதனாலுமாகும். மேலும் இப்பிரதேசம் வனாந்திரப்பகுதியாகவுமே காணப்பட்டது. இதன் காரணமாகவே இங்கு மனித குடியிருப்புக்கள் இங்கு காணப்படவில்லை.
    எனினும் இதனை அண்மித்த சிறுத்தேன்கல், வட்டவான், போன்ற பகுதிகள் உயரமான பகுதிகளாகக் காணப்பட்டது. இங்கு மக்கள் குடியிருப்புக்கள் காணப்பட்டது. அங்கு மக்கள் விவசாயம், சேனைப் பயிர்ச்செய்கை, வீட்டுத்தோட்டம் என்பவற்றை செய்து கொண்டு சீவனோபாயம் நடாத்தினர்.
    அக்காலத்தில் கதிர்காமத்துக்கு தலயாத்திரை செல்லும் அடியவர்கள் சித்தாண்டிப் பிரதேசத்தினூடாகவே செல்ல நேர்ந்தது. அவ்வாறு தலயாத்திரை செல்லும் போது அடியவர்களுக்கு சித்தாண்டிப் பிரதேசத்தில் தங்கிச் செல்ல நேர்ந்தது. அவ்வடியவர் கூட்டத்தில் சிகண்டி எனும் ஒரு தவசியும் தலயாத்திரையை மேற்கொண்டிருந்தார்.
    சிகண்டி எனும் தவசி கதிர்காமத்துக்கு கொண்டு செல்வதற்காக கையில் ஒரு வேலுடன் வந்திருந்தார். அவர்கள் சித்தாண்டிப் பிரதேசத்தில் தங்கிச்செல்ல நேரிட்டதால் அனைவரும் இங்கு தங்க வேண்டி ஏற்ப்பட்டது. அப்போது தவசியும் இங்கு தங்கினார். அவர் தான் கையில் வைத்திருந்த வேலினை ஒரு இடத்தில் குத்தி விட்டு தனது கடமைகளைச் செய்தார். மறுநாள் காலையில் தமது பயணத்தை தொடங்குவதற்க்காக தவசி குத்திய வேலினை எடுக்க முயற்சித்தபோது வேலானது வெளிவரவில்லை. குத்திய இடத்திலேயே அசையமல் இருந்தது. (அதுவே இன்றைய சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்.)
    இதன் காரணமாக தலயாத்திரை செல்ல வந்த தவசியும் இங்கேயே தங்கிவிட்டார். அவர் வழிபாடுகளையும் இவ்விடத்திலேயே நடாத்தி வந்தார். மேலும் இதனை அறிந்த மக்கள் இங்கு வந்து வழிபாடுகளை நிகழ்த்திச் செல்வது வழக்கமாயிற்று. மேலும் தவசியானவர் மக்களுக்கு நல்லறிவுரைகளை கூறுவதுடன் அவர் மருத்துவத்தினையும் மேற்கொண்டு வந்தார். இதன் காரணமாக மக்கள் இவரை முருகனின் அம்சமாகவும், தெய்வத்தன்மை பொருந்தியவராகவும் போற்றினர். மேலும் இதனையெல்லாம் அறிந்த மக்கள் இங்கு வந்து காடுகளை வெட்டி குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டார்கள் எனக் கூறப்படுகின்றது.
    தவசி சிலகாலமே இங்கு தங்கினார். அவர் செல்ல வேண்டிய நேரமும் வந்தது. இதன் காரணமாக அவர் ஆலயப்பொறுப்புக்களை மக்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றார் எனவும் கூறப்படுகின்றது. இவர் ஆலயப்பொறுப்புக்களை வன்னியனார், வண்ணக்கனாரிடமே ஒப்படைத்ததாகக் கூறப்படுகின்றது.
    சிகண்டி என்னும் தவசி இங்கு வந்து சில காலம் தங்கி பல சித்துக்களை செய்து இவ்வூரினை ஆட்சி செய்ததின் காரணமாக அவரை நினைவு கூரும் வகையில் இவ்வூருக்கு மக்கள் சித்தாண்டி எனும் காரண இடுகுறிப்பெயரை சூட்டினர். அதாவது'சித்து 10 ஆண்டி ஸ்ரீ சித்தாண்டி'.

3.2 புவியியல் அம்சங்கள்
    சித்தாண்டிப்பிரதேசம் கடற்கரையிலிருந்து சுமார் 3 அல்லது 4 கிலோமீற்றர் தூரத்தினையும், கரையோரச்சமவெளியில் அமைந்ததாகவும் காணப்படுகின்றது. எனினும் இது ஒரு தாழ்வான நிலப்பகுதியாகக்காணப்படுகின்றது. சித்தாண்டிப்பரதேசத்தின் மண்ணமைப்பினைப் பார்ப்போமானால் சாம்பல் நிற மண்ணமைப்பினைக் கொண்டதாக அமைந்துள்ளது.
    சித்தாண்டிப்பிரதேசத்தின் எல்லையூடாக சந்தனமடு என்னும் ஆற்றின் கிளையாறு ஒன்று பயணிக்கின்றது. இது இப்பிரதேச மக்களின் நன்னீர் மீன்பிடிக்கு உதவுகின்றது. மேலும் இப்பிரதேச மக்கள் மிகவும் நெருக்கமான குடியிருப்புக்களை அமைத்துள்ளதனை அவதானிக்கலாம். அதாவது இப்பிரதேசத்தில் சனத்தொகை அடர்த்தியாக    காணப்படுகின்றது.
    இப்பிரதேசம் தாழ்வான பகுதியாகக் காணப்படுவதினால் வெள்ள அணர்த்தங்களும் இங்கு ஏற்;படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
3.3 கலாசார மற்றும் பண்பாடு
    பண்பாடு என்பது ஒரு மக்கள் கூட்டம் கொண்டுள்ள பௌதீக பொருட்களுடன் கொண்டுள்ள தொடர்புகள் மற்றும் அவர்களது பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் போன்றவற்றைக் குறிக்கும். கலாசாரம் என்பதும் அவ்வாறே,
    அந்தவகையில்சித்தாண்டிப்பிரதேச மக்கள் பெரும்பாலும் தமிழர் பண்பாடுகளையே பின்பற்றுகின்றனர் எனக்கூறலாம். எனினும்; தங்களுக்கென்று உரிய பண்பாடுகளையும், கலாசாரங்களையும் இவர்கள் கொண்டுள்ளனர். அதனை நாம் பின்வருமாறு திருமணம், குடும்பம், சீதனம், சமயம், விழாக்கள், பண்டிகைகள், அந்திமக்கிரியைகள், மூடநம்பிக்கைகள்,போன்ற தலைப்புக்களின் கீழ் ஆராய்வோம்.

3.3.1 சமயம்
    சித்தாண்டிப்பிரதேசத்துக்குரியதான தனிச்சிறப்பு பெரும்பாலன அனைத்து மக்களும் இந்து சமயத்தினைப்பின்பற்றுவபர்களாகவே காணப்படுகின்றனர். இதற்கு காரணம் மேலே வரலாற்றுப்பகுதியில் கூறப்பட்டதற்கமைவாக அவர்களது குடியேற்றம் கோயிலை மையமாகக் கொண்டு அமைந்ததே எனக்கூறலாம்.

    தற்காலத்திலேயே மதப்பிரசாரங்களினாலும், பல்வோறு காரணங்களினடிப்படையிலும் ஓரிரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மதமாற்றத்தினை மேற்க்கொண்டுள்ளனர் எனக்கூறலாம். குறிப்பாக கிறிஸ்தவ சமயத்தினைக் கூறலாம். எனினும் இவர்கள் பிறப்பினாலும், பரம்பரையினாலும் இந்து சமயத்தினையே சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    மேலும் இங்கு வாழும் மக்கள் இந்து சமயத்தினராகக் காணப்படுவதனால் சமயம் சார்பான நடவடிக்கைகள் அதிகாமகக்காணப்படுகின்றது. குறிப்பாக விரதங்கள் கடைப்பிடிப்பது, விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவது போன்றவற்றைக் கூறலாம்.
    மேலும் இங்கு வாழும் மக்கள் ஆகமம் சார்ந்த, ஆகமம் சாராத வழிபாடுகளை ஆற்றிவருகின்றனர். கோயில்களுக்கு சென்று வழிபாடுகளை ஆற்றுவபர்களாகவும் அம்மன், பிள்ளையார், முருகன் போன்ற வழிபாடுகளை ஆற்றுவபர்களாகவும் காணப்படுகின்றனர். இம்மக்களின் வழிபாட்டுக்காக பல கோயில்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
    இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயங்கள் ஆகமம் சார்ததாகவும், ஆகமம் சாராத முறையிலும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சில பிள்ளையார் ஆலயங்களும், அம்மன் ஆலயங்களும் ஆகமம் சாராத முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகமம் சாராத பிள்ளையார் ஆலயங்கள் தவிர்ந்த பெரும்பாலான ஆலயங்களில் தேவாதிகள் ஆட்டுதல் (தெய்வம் ஆட்டதல்,) பலி கொடுத்தல் போன்ற விடயங்களும் இடம்பெறுகின்றன.
    மேலும் தமது வீடுகளிலும் வைரவர், அம்மன், குமாரர் போன்ற தெய்வங்களுக்காக பந்தல் வடிவமான கட்டிடங்களை ஓலை, மரம், மற்றும் சீமெந்து போன்றவற்றினால் அமைத்து வழிபடுகின்றனர். இத்தெய்வங்கள் தம்மை காப்பதாகவும் அவை தமக்கு வரும் துன்பம், நோய்கள் போன்றவற்றை தீர்ப்பதாகவும் நம்புகின்றனர். மேலும் அவற்றுக்கு பொங்கல் போன்ற பூஜைகளையும் செய்வதனை அவதானிக்கலாம். அவ்வாறு செய்யாவிட்டால் தமக்கு நோய் போன்ற பிணிகள் ஆட்கொண்டுவிடும் எனவும் தம்மை கடவுளர்கள் தண்டித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இம்மக்களிடையே காணப்படுகின்றது. ஆனாலும் கூட இக்கிராமத்தில் வாழும் அனைத்து மக்களும் இம்முறையினைப் பின்பற்றவில்லை.

அது மட்டுமல்லாது இப்பிரதேசத்தில் முக்கியமாகக் காணப்படுகின்ற அம்சம், சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்தில் காணப்படும் காண்டாமணியானது அதிகாலை 4.00 மணி, 11.00 மணி, மற்றும் மாலை 5.00 மணிக்கு ஒலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இம்மணியோசை சுமார் கிராமத்தைச் சுற்றிலும் 1.5 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலும் கேட்பதை அவதானிக்கலாம். இது பல வகைகளில் மக்களக்கு உதவியாக அமைகின்றது. அதாவது அதிகாலை வேளை மக்களை நித்திரை விட்டெழச்செய்யும் விழிப்பொலியாகச் செயற்படுகின்றது. அது மட்டுமல்லாது இதன்மூலம் மக்கள் சரியான நேரத்தை அறிந்து கொள்ளவும் முடியும்.
    மேலும் இங்கு யாராவது ஒருவர் இறந்தால் ஆலயத்தின் வாயிற்கதவில் ஒன்றை மூடி துக்கத்தினை வெளிப்படுத்துவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இறந்தவரின் பூதவுடல் அடக்கம் செய்யும் வரை பூiஐ நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படமாட்டாது.
    இங்கு காணப்படுகின்ற இன்னுமொரு சிறப்பான அம்சம் என்னவெனில் இக்கோயில் திருவிழாக்கள் அனைத்தையும் மக்களே பொருளாதார உதவிகளைக்கொடுத்து திருவிழாக்களை நடாத்துகின்றனர்.

3.3.2 திருமண நடைமுறைகள்
    ஒரு மனிதனின் வாழ்கையில் முக்கியமான அம்சமாகக் காணப்படுவது திருமணமுமாகும். அந்தவகையில் திருமண நடைமுறைகள் எமது கிராமத்தில் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என ஆராய்வோம். திருமணச் சடங்குகள் பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடும். அதனடிப்படையில் இப்பிரதேசத்தில் திருமணச்சடங்குகளானது பெரும்பாலும் தமிழர் பண்பாடுகளை ஒட்டியதாகவே காணப்படுகின்றது.
    ஆரம்பகாலத்தில் இங்கு திருமணங்களானது பேசித்தீர்க்கடுவதாகவே காணப்பட்டது. எனினும் இன்றைய நாகரீக உலகில் காணப்படுவது போன்று இப்பிரதேசத்தில் காதல் திருமணங்களும், பேசித்தீர்க்கப்படும் திருமணங்களும் இடம்பெறுகின்றன. காதல் திருமணங்களில் சடங்குகள் பெரும்பாலும் நிகழ்த்தப்படுவதில்லை என்றாலும் கூட பேசித்தீர்க்கப்படும் திருமணங்களில் சடங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
    அந்தவகையில் பேசித்தீர்க்கப்படும் திருமணச்சடங்குகளை விரிவாக ஆராய்வோம். திருமணமொன்றை நிச்சயிக்கமுன் ஆண், பெண் இருவீட்டாரும் தமது வசதிகளுக்குரியதான முறையில் பெண் அல்லது ஆண் வீட்டாரை தெரிவு செய்வார்கள். இதனடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் திருமணப்பொருத்தம் பார்க்கப்படும். அவ்வாறு பார்க்கப்பட்டபின் திருமணத்துக்குரிய தினத்தினை இருவீட்டாரும் தீர்மானிப்பார்கள்.
    திருமணத்தினத்தினை தமது வசதிக்கேற்ற முறையில் வீட்டிலோ, ஆலயங்களிலோ செய்யத் தீர்மானிப்பர். திரமணத்தினத்தின் போது முதலில் பெண் வீட்டார் மணமகனின் வீட்டக்கு சென்று மணமகனை அழைத்துவருவார்கள். அடுத்து மணமகளை அழைத்து வருவார்கள். இருவரையும் மணமேடையில் அமரவைத்து சில கிரியைகளை செய்விப்பார்கள். இக்கிரியைகளை செய்வதற்காக அந்தனர்களை அல்லது பிராமணர்களையே தெரிவு செய்வார்கள்.
    கிரியை முறைகள் நடத்திக்கொண்டிருக்கும் போது கூறை கொடுத்தல் என அழைக்கப்படும் விடயம் நடாத்தப்படும். அதாவது மணமகனுக்காக மணமகள் வீட்டாரும், மணமகளுக்காக மணமகன் வீட்டாரும் வாங்கிய ஆடைகளை மாற்றுதலாகும். இங்கு மணமகனுக்காக வேட்டியும், மணமகளுக்காக புடவையும் வாங்கப்படும். தாலி கட்டுதல் நிகழ்வின் போது இவ்வாடைகளையே மணமக்கள் அணிந்துகொள்வார்கள்.
    மேலும் பல கிரியைகள் செய்து முடிக்கப்பட்ட பின் அடுத்து தாலி கட்டுதல் நிகழ்வு இடம்பெறும். தாலி கட்டும் போது மணமகனின் சகோதரி முறையானவளே தாலியை பெண்ணுக்கு அணிந்து விடுவார். தாலியானது மஞ்சட் கயிறு, அல்லது தங்கத்தினால் செய்யப்பட்டிருக்கும். தாலியை தெரிவு செய்வபர்கள் இங்கு மணமகன் வீட்டாராகவே காணப்படுவர்.
    திருமண நிகழ்வின் போது அம்மி மிதித்தல், அருந்ததி எனும் நட்சத்திரம் பார்த்தல், கண்ணாடி பார்த்தல், பொட்டுவைத்தல், பால் பழம் உண்ணுதல் முதலான நிகழ்வுகள் இடம்பெறும். திருமணம் நிறைவு பெற்றவுடன் மணமக்களை மணமகளின் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள். அன்றைய நாள் இருவீட்டாருக்கும் மிகவம் சந்தோசமான தினமாக அமையும். அது மட்டுமன்றி விருந்துபசார நிகழ்வுகளும் இடம்பெறும்.
    திருமணம் நடந்து மூன்றாம் அல்லது ஐந்தாம் தினத்தன்று மணமக்கள் இருவரையும் மணமகனின் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். இதனை இங்கு கால் மாறிச் செல்லுதல் என அழைக்கின்றனர்.
    திருமண நிகழ்வின் போது பெட்டி கொண்டு செல்லுதல் போன்ற முறைகளும் காணப்படுகின்றன. அதாவது அரிசி, வாழைப்பழம், தேங்காய், மரக்கறிவகைகள், கொழுக்கட்டை, பனியாரம், முறுக்கு போன்ற ஏழு வகைப்பொருட்கள் பெட்டிகளில் கொண்டு செல்வர். இதனையே பெட்டி கொண்டு செல்லுதல் என அழைக்கின்றனர்.
    திருமணமானது சித்திரை, ஐப்பசி, ஆனி போன்ற மாதங்களில் தவிர்க்கப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. இதற்க்கு சில காரணங்கள் இவர்களால் முன்வைக்கப்படுகின்றன. அதாவது இம்மாதங்களில் செய்யப்படும் திருமண வாழ்க்கையானது சிறப்பாக அமையாது, வாழ்க்கை தொடர்ந்து நிலைபெறாது, ஆண், பெண்ணுக்கு பாதகமாக அமைந்து விடும் போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
   
3.3.3 சீதனம்
    சீதனம் என்பது அநேகமான பிரதேசங்களில் காணப்படும் விடயமாகக் காணப்படுகின்றது. இது சித்தாண்டிப் பிரதேசத்திலும் காணப்படுகின்றது. அதாவது திருமணம் ஒன்றினை செய்து வைக்கும் போது பெண்வீட்டாரே சீதனமாக பொருட்களையும், பணங்களையும் மணமகனுக்கு வழங்குகின்றனர். சீதனமாக சித்தாண்டிப் பிரதேசத்தில் வழங்கப்படுவது, வீடு, பணம், நிலப்பரப்பு, வயல் நிலங்கள், மந்தைக் கூட்டங்கள் வாகனங்கள் போன்றவையாகும்.
    சீதனப்பிரச்சினை காரணமாக சித்தாண்டிப்பிரதேசத்தில் அநேகமான பெண்களுக்கு காலம் கடந்தும் திருமணமாகாத நிலைமையினைக்காணக் கூடியதாகவுள்ளது. குடும்பத்தில் ஒரிரு பெண்கள் காணப்படின் அங்கு பெரும்பாலாக சீதனம் கொடுப்பதில் சிக்கல்கள் குறைவாகவே காணப்படும். ஆனால் பல பெண்களை கொண்டு காணப்படும் குடும்பங்களிலேயே இது ஒரு பிரச்சினையாக்காணப்படுகின்றது. இந்தப்பிரச்சினை காணப்படவதற்கு பிரதான காரணமாக அமைவது இங்கு அநேகமானவர்கள் விவசாயிகளாகவும், வறியவர்களாகவும் காணப்படுவதேயாகும்.

3.3.4குடும்பம்
    இக்கிராமத்தில் குடும்ப அமைப்புக்களைப் பார்ப்போமானால், கருக்குடும்பம், கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பிலேயே காணப்படுகின்றது. குடும்பத்தின் தலைமைத்துவத்தினை ஏற்று நடத்துபவராக தந்தையும், அதற்கடுத்து தாயும் காணப்படுகின்றனர். குடும்பத்தின் வருமானத்தினை ஈட்டிக்கொடுப்பவராக தந்தையே காணப்படுகின்றார். சில தந்தையை இழந்த குடும்பங்களில் பெண்கள் தொழில்களைச் செய்வபர்களாகக் காணப்படுகின்றனர்.
    அண்மைக்காலமாக சில குடும்பங்களில் அரச தொழிலினைப் பார்ப்போர்களாகவும் காணப்படுகின்றனர். மேலும் சில குடம்பங்களில் மூத்த ஆண் பிள்ளை தொழிலினை மேற்க்கொண்டு குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேற்ககொள்வபர்களாகக் காணப்படுகின்றனர். இங்கு பெரும்பாலும் தந்தை வழிச்சமூகவே பின்பற்றப்பட்டுவரகின்றது.
    குடும்பத்தின் வீடு, நிலப்பரப்புக்கள் போன்றவற்றை பெண் பிள்ளைகளுக்கும், வயல் நிலங்கள், வாகனங்கள், மந்தைகள் போன்றவற்றை ஆண் பிள்ளைகளுக்கும் கொடுக்கும் மரபு இங்கு பின்பற்றப்படுகின்றது.

3.3.5 இறப்பு மற்றும் அந்திமக்கிரியைகள்.
    மனிதனாகப்பிறப்பவன் என்றாவது ஒரு நாள் இறந்தாகவே வேண்டும். அந்தவகையில் சித்தாண்டிப் பிரதேசத்தில், இறந்த ஒருவருக்கு இறுதிக்கிரியைகளை நடாத்தும் நிகழ்வுகள் முக்கியமாக இடம்பெறுகின்றன. ஒருவர் இறந்தால் அத்துக்க நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
    ஒருவர் இறந்தால் அவரை குளிப்பாட்டுதல் என்னும் நிகழ்வினை மேற்க்கொண்டு, அவரை புதிய ஆடைகளால் அலங்காரம் செய்வார்கள். செய்து முடித்தபின் இறுதி அஞ்சலிக்காக மக்கள் மத்தியில் சடலம் வைக்கப்படும். சடலத்தினை பெரும்பாலம் கட்டிலிலேயே வைக்கின்றனர். சடலத்தின் தலை மற்றும் கால் பக்கங்களில் குற்று விளக்கினை ஏற்றி வைப்பார்கள்.
    இறந்த வீட்டின் கூரைப்பகுதியில் வெள்ளைத்துணியினால் கட்டி தூங்கவிடப்பட்டிருப்பர். இதனை வெள்ளை கட்டுதல் என அழைப்பார்கள்.சடலத்தினை அடக்கம் செய்யக்கொண்டு செல்வதற்க்காக வாளைக்குற்றி, தென்னோலை, மற்றும் மரத்தினால் கூடாரம் போன்ற அமைப்பினை தயார் செய்து கொள்வார்கள். இதனை கட்டில் கட்டுதல் என அழைப்பார்கள்.  சடலத்தினை அடக்கம் செய்ய கொண்டு செல்ல முன்னர் தேவாரம், பெரிய புராணம் போன்றவற்றினை ஓதும் நிகழ்வு இடம்பெறும். அதன்பின்னர் பூதவுடலினை கட்டிலில் வைத்து சித்தாண்டி இந்து பொதுமயானத்திற்கு எடுத்துச்செல்வார்கள்.
    இறந்த வீட்டில் துக்கத்தினை வெளிப்படுத்தும் நிகழ்வாக எட்டு நாட்கள் பல விடயங்களை மேற்க்கொள்வார்கள். மூன்றாம் நாள் பால் பழம் வைத்தல் மற்றும் பொங்கல் படைத்தல், எட்டாம் நாள் கல்லை வைத்தல் போன்ற நிகழ்வினை மேற்க்கொள்வார்கள். இந்த எட்டு நாட்களும் துக்க வீட்டாருக்கு உணவுப்பொருட்களையும், சாப்பாட்டுப்பொருட்களையும் அயலவர்களே கொடுத்துதவுவார்கள்.
    இந்த எட்டு நாட்கள் செல்லும்வரை துக்க வீட்டினர் நற்காரியங்களை மேற்க்கொள்ளமாட்டார்கள், மற்றும் கோயில் வழிபாட்டினையும் மேற்கொள்ளமாட்டார்கள்.

3.3.6விழாக்கள் மற்றும் பண்டிகைகள்
    சித்தாண்டிப் பிரதேச மக்கள் பெலும்பாலும் இந்துக்களாக காணப்படுவதனால் பல்வேறு விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை கொண்டாடுகின்றார்கள். தைப்பொங்கல் விழா, சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி, கார்த்திகை விழக்கீடு, போன்றவற்றைக்கூறலாம். இவ்விழாக்களை மக்கள் பெரும்பாலும் மிகச்சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
    இவ்விழாக்காலங்களின் போது புதிய ஆடைகளை அணிந்து கொண்டு, பல வகையான உணவுப்பண்டங்களையும் செய்து கொண்டு தமது அயலவர்கள், சொந்தங்களுடன் சந்தோசமான முறையில் கொண்டாடுகின்றனர். இக்காலங்களில் மக்கள் ஆலய வழிபாடுகளை மேற்க்கொள்வதும் முக்கியமானதாகும்.

3.3.7 உணவு முறைகள்
    இப்பிரதேச மக்களின் பிரதான உணவாக சோறு காணப்படுகின்றது. இப்பகுதி மக்களின் பிரதான சீவனோபாயத் தொழிலாக நெற்செய்கை காணப்படுவதனால் இப்பகுதி மக்கள் சோற்றையே பிரதான உணவாகக் கொள்கின்றனர். சில குடும்பங்களில் மூன்று வேளை உணவாகவும் சோறே காணப்படுகின்றது.
    மேலும் இப்பகுதி மக்கள் ஊட்டச்சத்தான போஷாக்கான உணவுகளையே பெற்றுக்கொள்கின்றனர்.வீட்டுத்தோட்டங்களையும்,சேனைப்பயிர்செய்கையையும் மேற்க்கொள்வதனால் சிறந்த மரக்கறி வகைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றது. மேலும் இப்பிரதேசத்தினூடாக ஆறு பயனிப்பதனால் நன்னீர் மீன் வகைகளையும் பெற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி மந்தைகள் வளர்ப்பதனால் இறைச்சி, முட்டை, பால் போன்ற நிறைவான ஊட்டச்சத்துள்ள உணவுகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள்.

3.3.8 பில்லி சூனிய மந்திர நம்பிக்கைகள்
    இக்கிராமத்தில் பில்லி, சூனிய, மந்திர விடயங்களில் இன்றும் கூட மக்கள் நம்பிக்கைகள் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். அவ்வாறன விடயங்களை மேற்க்கொள்ளும் சில நபர்களை இக்கிராமத்திலேயே காணலாம்.

3.3.9 பேய் தொடர்பான நம்பிக்கைகள்
    இக்கிராமத்தில் பேய் தொடர்பான நம்பிக்கைகளைப் பார்ப்போமானால், இக்கிராம மக்கள் பெரும்பாலும் பேய் உள்ளது என நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனை மயானத்தின் அண்மையில் மக்கள் குடியிருப்புக்கள் காணப்படாததை அடிப்படையாகக் கொண்டு கூறலாம்.

3.3.10 நம்பிக்கைகள்
    இக்கிராமத்தில் மூட நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் காணப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் மூடநம்பிக்கைகள் அதிகமாகக் காணப்பட்டது. எனினும் தற்காலத்தைய சூழ்நிலைகளில் அது படிப்படியாக குறைந்து கொண்டு செல்கின்றது. காகம் கரைந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என நம்புதல், பல்லி விழுந்தால் அல்லது கீச்சிட்டால் அதற்கு ஒருவிடயத்தினைக் கூறுதல், கனவு கண்டால் அதனை நம்புதல் போன்ற விடயங்கள் இங்கு காணப்படகின்றன.
    மேலம் பல விடயங்கள் இங்கு காணப்படகின்றன. அதாவது சனி, புதன் கிழமைகளில் ஒரு இறப்பு ஏற்பட்டால் இன்னுமொரு இறப்பு ஏற்படும் என நம்புகிறார்கள். அவ்வாறு இறப்பு ஏற்பட்டால் பூதவுடலினை அடக்கம் செய்யும் போது  அதனுடன் ஒரு முட்டை அல்லது தென்னங்கன்றினையும் வைத்து அடக்கம் செய்யும் முறை இப்பிரதேசத்தில் காணப்படகின்றது.
    அது மட்டுமல்லாது ஐப்பசி, ஆடி, சித்திரை, போன்ற மாதங்களில் திருமணம் செய்யக்கூடாது என்ற நம்பிக்கையினையும், ஆடி மாதத்தில் இறப்பு ஏற்ப்பட்டால் தீமை எனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
    பிரயாணங்களை மேற்க்கொள்ளும் போது சகுணங்கள் பார்த்துச் செல்லுதல்,ஒரு விடயத்தினை அல்லது செயலினை செய்யும் போது  நல்ல நேரம் பார்த்து செய்தல் போன்ற விடயங்களும் காணப்படுகின்றன. 
    சாஸ்திரம், ஜோதிடம் முதலான விடயங்களிலும் இப்பிரதேச மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். தமது வீடுகள், கிணறுகள், மற்றும் சில கட்டிடங்களை நிர்மானிக்கும் போதும் எத்திசை நோக்கி அமைய வேண்டும், எவ்வாறு அமைக்க வேண்டும் போன்றவற்றில் சாஸ்திர விடயங்களை கைக்கொள்ளுகின்றனர். அதுமட்டுமல்லாது புதிதாகப்பிறந்த குழந்தைக்கும் பெயர் சூட்டுதல் போன்ற விடயங்களிலும் கூட இம்முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

3.3.11 ஆடை அணிகலங்கள்
    இக்கிராமத்தின் உடை உடுத்தும் வழக்கத்தினை ஆராய்வோமானால், ஆரம்பகாலத்தில் ஆண்கள் வெள்ளை வேஸ்டியும் சால்வைத்துண்டினையுமே அணிவபர்களாகவும், பெண்கள் புடவை உடுத்தும் வழக்கத்தினையும் கொண்டிருந்தனர். இவ்வாறான முறையினை இன்று ஒரு சிலரிடமே காணக்கூடியதாகவுள்ளது. நாகரிக உலகிற்கேற்ப இங்கும் மாற்றத்தினை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
    பெண்கள் காதணிகள், வளையல்கள், போன்ற ஆபரணங்களை அணியும் முறை இங்கு காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது ஆரம்பகாலத்தில் ஆண்கள் கடுக்கன் எனும் காதணியினை அணியும் முறையும் காணப்பட்டது.
    திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமத்தினால் பொட்டு வைத்துக்கொள்ளும் முறையினையும் இங்கு பின்பற்றுகின்றார்கள்.

ஆக்கம்:- அ.பிரசாந்தன்
(தொடரும்...)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

முந்தைய தொடர்கள்.

Previous Post Next Post