எனது கிராமம் சித்தாண்டி - தொடர் 01

கிழக்குப் பல்கலைக்கழகத்திலே கல்வி பயில்கின்ற சித்தாண்டியைச் சேர்ந்த அ.பிரசாந்தன் எனும் மாணவரின் ஆக்கம் இதுவாகும். இத்தகைய ஆக்கங்களையும் தொடர்ந்தும் நாம் வரவேற்பதுடன், மகிழ்ச்சியும் கொள்கின்றோம். தொடர்ந்தும் இத்தகைய எமது பிரதேசம் சார்ந்த ஆக்கங்களையும் செய்திகையும் எதிர்பார்ப்பதுடன், ஆக்கத்தை வழங்கியமைக்கு எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 


கட்டுரையானது வாசகர்களுக்கு இலகுவாக படிப்பதற்கேற்ற வகையில் சிறுசிறு தொடர்களாக எமது இணையத்தளத்தில் தொடர்ந்து பிரசுரிக்கப்படும்.இவருடைய ஆக்க முயற்சிகளை வாசகர்கள் வரவேற்று தமது கருத்துக்களை பேஸ்புக் போன்றவற்றினுடாக தெரிவித்து அவரை ஊக்கப்படுத்தலாம்.

சித்தாண்டி கிராமம் மாத்திரமன்றி சுற்றியுள்ள எமது ஏணைய கிராமங்கள் பற்றியட்டுரைகளையும் நாம் பிரசுரிப்போம். இவ் இணையத்தளமானது கிராமத்திற்கு முன்னுரிமை வழங்கிவரும் இணையத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது. 


             முழுதளாவிய முறையில் எனது கிராமம்
                                            (அ.பிரசாந்தன், கிழக்குப் பல்கலைக்கழகம்)


1.    அறிமுகம்
        பல்கலைக்கழகங்கள் பல கலைகளையும் வழங்குகின்ற ஓர் தலமாக விங்குகின்றன. பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் விருத்திக்காக பல செயற்பாடுகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் 2012 ஆம் ஆண்டு முதலாம் வருடத்தில் கலைகலாசார பீடத்தில் சமூகவியல் பாடநெறியினைக் கல்வி பயிலும் மாணவர்களாகிய எங்களுக்கு பாடத்திட்டத்திற்கமைவாக களப்பணியினை மேற்கொண்டு ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பிக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.
    அந்தவகையில் எமக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பானது 'முழுதளாவிய அணுகுமுறையில் எனது கிராமம்'என்னும் தலைப்பாகும். அந்தவகையில் நான் ஒரு ஆய்வாளனாக இருந்து கொண்டு எனது கிராமமான சித்தாண்டிப் பிரதேசத்தினை தெரிவு செய்து ஆய்வுப்பணியினை மேற்க்கொண்டுள்ளேன். இதன் மூலம் நான், எனது கிராமத்தினைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது மட்டுமல்லாது ஏனையவர்களும் எனது கிராமமான சித்தாண்டிப் பிரதேசத்தினை அறிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

1.1    களஆய்வு
களஆய்வு என்பது ஒரு விடயத்தினை தெரிவு செய்து கொண்டு அது பற்றிய அனைத்து தகவல்களையும் பெறுவதாக அமையும். களஆய்வுக்கான தகவல்களை புகைப்படங்கள், வரைபடங்கள், புள்ளிவிபரத்தரவுகள் மற்றும் நபர்களின் வாய்மொழித் தகவல்கள் என்பவற்றினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். அதனடிப்படையில் நான் எனது பிரதேசமான சித்தாண்டிப் பிரதேசத்தினைமுழுதளாவிய அணுகுமுறையில் ஆய்வு செய்யவுள்ளேன்.
களஆய்வினை மேற்கொள்பவனை ஆய்வாளன் எனக்கூறுவார்கள். களஆய்வினை மேற்கொள்ளும் போது ஆய்வாளன் பல பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி நேரிடுகின்றது.  எனினும் அதனை எதிர்கொண்டு செயற்ப்படுவானாயின் களஆய்வினை வெற்றிகரமானதாக நிறைவுசெய்யமுடியும்.

1.2     ஆய்வின் நோக்கம்
        'முழுதளாவிய அணுகுமுறையில் எனது கிராமம்'என்னும் இவ்வாய்வினூடாக எனது கிராமமான சித்தாண்டி பற்றி ஏனையவர்களுக்கு தெரியப்படுத்துவதாக அமைவதுடன் மேலும் ஒரு ஆய்வாளன் எவ்வாறு செயற்பட வேண்டும், களப்பணியினை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்பன பற்றி தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் ஒரு ஆய்வினை மேற்க்கொள்வதற்கான பயிற்சிகளும் மாணவர்ளுக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களை பூரணத்துவமுடையவர்களாக மாற்றுவதும் இவ்வாய்வின் நோக்கமாகக் காணப்படுகின்றது.

1.3 ஆய்வின் நன்மைகள்
    ஒரு ஆய்வினை மேற்க்கொள்ளும் போது பல இடர்பாடுகள் காணப்படினும்கூட அதில் அதிகளவான நன்மைகளே கிடைக்கின்றன. அந்தவகையில் இவ்வாய்வினை மேற்கொள்வதன் மூலமும் பல வகையான நன்மைகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அவையாவன
•    மாணவர்களாகிய எங்களுக்கு சிறந்த களஆய்வு தொடர்பான அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ள கூடியதாகவிருக்கும்.
•    ஏனையவர்களுடன் தொடர்வு கொள்ளும் முறை, மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் முறை போன்ற அனுபவத்தினைப் பெறமுடியும்.
•    எமது கிராமம் பற்றிய பூரண அறிவை எமக்கு வழங்குவதாகவிருக்கும்.
•    எமது கிராமம் பற்றி ஏனையவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவிருக்கும்.
•    எமது கிராமத்தின் முக்கிய விடயங்கள், கலாசார பண்பாட்டு விடயங்கள், பற்றி பிறருக்கும் தெரியப்படுத்துவதாக அமையும்.
•    எமது கிராமத்தில் காணப்படும் பிரச்சினைகளையும் அறிந்து கொள்ளமுடியும்
•    அவ்வாறான பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வினைக்கான்பது என்பது தொடர்பான அறிவினையும் பெற்றுக் கொள்ள வழியேற்படும்.
•    ஆய்வுக்கட்டுரையை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பான அறிவும் கிடைக்கின்றது.
    மேற்கூறப்பட்டவாறு இவ்வாய்வினை மேற்க்கொள்ளும் போது பல நன்மைகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்பது திண்ணம்.

1.4 முழுதளாவிய அணுகுமுறை
மானிடவியலிலானது முழுதளாவிய அணுகுமுறையை கொண்ட ஒரு பாடப்பரப்பாகக்காணப்படுகின்றது. அதாவது மனிதனை பல கோணங்களிலும் (பல்வேறு துறைகளிலும்) ஆய்வுசெய்கின்றது.  அரசியல், மொழியியல், தொல்லியல், பொருளாதாரம், சட்டம்,பண்பாடு, கலாசாரம்,  முதலான துறைகளைக் கூறலாம்.
    மேற்க்கூறப்பட்டதனடிப்படையில் சித்தாண்டிப்பிரதேசமானது ஆய்வுசெய்யப்படவுள்ளது.

2.    சித்தாண்டிப் பிரதேச அறிமுகம்.

2.1    அமைவிடம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மீன்பாடும் தேன்நாடு என சிறப்பாகப் போற்றப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே சித்தாண்டி எனும் அழகிய கிராமம் அமையப்பெற்றுள்ளது. இது மட்டக்களப்பு நகரின் வடக்கே சுமார் 19மஅ தூரத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கே சந்தனமடு என்னும் ஆறு பாய்கின்றது. தெற்கே மாவடிவேம்பு எனும் கிராமமும், கிழக்கே முறக்கெட்டாஞ்சேனை எனும் கிராமமும் அமைந்துள்ளது.


சித்தாண்டிப் பிரதேசத்தினூடாக மட்டக்களப்பு – திருமலை – கொழும்பு யு 15 என்னும் பிரதான வீதியும், மட்டக்களப்பு – கொழும்பு புகையிரத பாதையும் செல்கின்றது.
சித்தாண்டிப்பிரதேசத்தில் முற்றுமுழுதாக இந்து ஆலயங்களே அமைந்து காணப்படுகின்றன. அதனுள் அம்மன் ஆலயங்கள், பிள்ளையார் ஆலயங்கள், முருகன் ஆலயங்கள், மற்றும் நாகதம்பிரான், பெரியதம்பிரான், போன்ற ஆலயங்களும் அமைந்துள்ளன. இங்கு பிரசித்தி பெற்ற தேசத்துக் கோயிலான சித்தான்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம் அமைந்து காணப்படுகின்றன.
சித்தாண்டியின் மேற்குபகுதியானது வயல்நிலங்களால் சூழ்ந்துள்ளது.மேலும் இங்கு இந்துப்பொது மயானமும் காணப்படுகின்றது.இதனை கீழே தரப்பட்டுள்ள வரைபடத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

2.2 நிர்வாகக் கட்டமைப்பு
    சித்தாண்டிப் பிரதேசமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் காணப்படும் பிரதேசமாகக் காணப்படுகின்றது. இக்கிராமம் சித்தாண்டி 01,சித்தாண்டி 02, சித்தாண்டி 03, சித்தாண்டி 04 என நான்கு கிராமசேவகர் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் கல்குடா வலயத்தேர்தல் தொகுதியின் கீழ் அமைந்துள்ளது.
    இக்கிராமத்தில் மூன்று ஆரம்பப்பாடசாலைகளும் ஒரு உயர்தரப்பாடசாலையும் அமைந்து காணப்படுகின்றது. மேலும் மூன்று முன்பள்ளிப் பாடசாலைகளும் அமைந்துள்ளன. முன்பள்ளிப்பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் கல்குடா வலயக்கல்விப் பணியகத்தின் கீழ், ஏறாவூர் கோட்டக்கல்வி அலுவகத்தின் கீழும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. உயர்தரப்பாடசாலையான மட்ஃவந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் நவோதயப்பாடசாலையாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. விபுலானந்தர் முன்பள்ளிப்பாடசாலையானது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய இரு முன்பள்ளிப்பாடசாலைகளும் தனியார் நிறுவனங்களினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
    இங்கு ஒரு உப அஞ்சல் அலுவலகமும், மக்கள் வங்கிக்கிளையொன்றும், பொது நூலகமொன்றும், வாராந்த சந்தைக்கட்டிடம், பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டும் காணப்படுகின்றன. இதில் பொது நூலகம், சந்தைத்தொகுதி என்பன ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
(தொடரும்...)
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
Previous Post Next Post