குடும்பிமலைக் குன்று பற்றி அறிவோம்

 


மட்டக்களப்பு மாவட்டமானது இலங்கையின் ஏணைய மாவட்டங்களுக்கு இணையாக முழுமையாக இல்லாவிட்டாலும் பெரும்பாலான அனைத்து பௌதிக  அம்சங்களையும் கொண்டு காணப்படுகின்றது. மலைகள், குன்றுகள், கரையோர அம்சங்கள், பருவகால நீர்வீழ்ச்சிகள் , ஆறுகள் இயற்கைத் தாவரங்கள் என ஏணைய இலங்கையின் பிரதேசங்களுக்கு குறைவில்லாத வகையில் காணப்படுகின்றது.

அழகிய மலைத்தொடர்களையும், தாவரப்போர்வைளையும், நீர்வீழ்ச்சிகளையும் ஒருங்கே மலைநாட்டு பிரதேசத்தில் காணக்கூடியதாகவிருப்பினும், கரையோர அம்சங்களான கடற்கரைகள், மணற்குன்றுகள், சமவெளிகளைக் காணமுடியாது. ஆனால் குறைவான வருடாந்த மழைவீழ்ச்சி காரணமாக பசுமையான தாவரப்போர்வையை முழுமையாகக் காணமுடியாவிட்டாலும் மட்டக்களப்பின் எல்லைப்பகுதிகளில் குன்றுகளையும் மலைகளையும் காணமுடிகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கெல்லையில் அதாவது ஏறாவூர் பற்று, கோறளைப்பற்றின் விளிம்புப்பகுதிகளில் இத்தகைய மலைகள் மற்றும் குன்றுகளுடன் கூடிய தரைத்தோற்றப் பகுதியினை அவதானிக்கலாம். மட்டக்களப்பு மாட்டத்திலேயே மிகவும் உயர்ந்த மலையாக 389.84 மீற்றர் உயரம்கொண்ட  லிண்டகல் மலை காணப்டுகின்றது. இப்பகுதிகளில் பருவமழை அதிகமாகக் கிடைக்கின்ற வேளைகளில் பருவகால நீர்வீழ்ச்சிகளையும் காணமுடுடியும். இவ்வாறு பல தரைத்தோற்ற அம்சங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலே குடும்பிமலை(Baron's Cap) ஒரு தனித்த குன்றாகக் காணப்படுகின்றது.


மொனொட்நொக்சு என்றால் என்ன?
ஒரு சமவெளிப்பகுதியொன்றில் அல்லது மென்மையான சாய்வுப் பகுதியொன்றில் இருந்து திடீரென உயர்ச்சியடைந்து காணப்படும் தனிமைப்படுத்தப்பட்ட குன்று, குமிழ் முகடு அல்லது சிறு மலை முதலியன தனித்த பாறைக் குன்று என அழைக்கப்படுகின்றது. தனித்த பாறைக்குன்றினை மொனொட்நொக்ஸ் (எச்சக்குன்று), இன்சல்பேக் (தளத்திடைக்குன்று ) எனவும் அழைக்கின்றனர். ஆனால் இரு பதங்களும் முழுமையாக ஒரே விடயத்தை பிரதிபலிக்கவில்லை.

தனித்தமைந்த குன்றுகள் பொதுவாக மொனொட்நொக்ஸ் என அழைக்கப்படுவதுடன், பாலைவன அல்லது வரண்ட பகுதிகளில் இன்சல்பேக் என அழைக்கப்படுகின்றது. இதேவேளை ஆபிரிக்காவில் சிறியதலை எனும் அர்த்தம் கொண்ட கொப்பி  என்ற ஆபிரிக்க சொல்லால் அழைக்கப்படுகின்றது. அதெபோன்று குவிவு வடிவிலான கருங்கல் மொனொட்நொக்சுக்களை போன்காட் எனவும் அழைக்கின்றனர்.

மொனொட்நொக்ஸ் என்ற பதமானது சுற்றிவரவுள்ள பகுதிகளில் அரித்தலினால் உயர்ந்து தனித்து நிற்கும் குன்றுகளுக்கு வழங்கப்படும் அமெரிக்க சொல்லாகும். புவிச்சரிதவிலாளர்கள் மொனொட்நொக்ஸ் என்ற பதத்தினை தென்மேல் சியுகம்சயர் பிரதேசத்திலுள்ள மொனொட்நொக்சு மலையிலிருந்து பெற்றுக்கொணடு பயன்படுத்தினர். நியுகம்சயளரில் காணப்படும் மொனொட்நொக்சு மலையானது சுற்றிவரவுள்ள தரைத்தோற்றத்திலும் பார்க்க 610 மீற்றர் உயருத்தில. அமைந்துள்ளதுடன், கடல்மட்டத்திலிருந்து 965 மீற்றர் உயரத்தையும் கொண்டமைந்துள்ளது.

சமவெளி அல்லது தரைப்பகுதியில் உயர்ந்து காணப்படும் பாறைகளில் உட்பகுதி அரிக்கப்படமுடியாத எரிமலைப் பாறைகளையும், சுற்றியுள்ள பகுதிகள் மென்பாறைகளையும் கொண்டு காணப்படுகின்றபோது இடம்பெறுகின்ற வானிலையாலழிதல் செயற்பாடுகளினால் பாறைகளின் சுற்றிவரவுள்ள பகுதி அகற்றப்படுகின்றது. இதனால் சுற்றிவரவுள்ள பகுதி அரிக்கப்பட்டு பாறைக்குன்றானது உயர்ந்து தனித்து வெளிப்படுகின்றது.

குறிப்பாக மழை நீர் காரணமாக ஏற்படுகின்ற கரைசல், மற்றும் அடையற்பாறைகளில் இடம்பெறுகின்ற வெப்பம் மற்றும் காற்றின் காரணமாக சிதைவுகளினால் சுற்றியுள்ள பாறைப்பகுதிகள் அரிக்கப்பட்டு நீக்கப்படுகின்றன. குறிப்பாக மழைநிகழ்கின்ற காலநிலைப்பகுதிகளில் பெருமளவில் கரைசல் மூலமும், பாலைவனப்பிரதேசங்களில் வெப்பம் மற்றும் காற்றின் காரணமாகவும் இத்தகைய பாறைகள் அரித்து நீக்கப்படுகின்றன.

குடும்பிமலை (Baron's Cap) என்றழைக்கப்படுகின்ற குன்றும் ஒரு எச்சக்குன்றுக்கு உதாரணமாகக் குறிப்பிடவேண்டியதாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் சிகிரியாக் குன்று, மிகிந்தலைக் குன்று என்பன தனித்தமைந்த எச்சக்குன்றாக (மொனொட்நொக்சு) குறிப்பிடப்படுகின்றன.

குடும்பிமலை எனும் மொனொட்நொக்சு
மட்டக்களப்பு மாவட்டமானது 14 பிரதேச செயலாளர் பிரிவகளைக் கொண்டது. இதில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவும் ஒன்றாகக் காணப்படுகின்றது. கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையாக கோறளைப்பற்று வடக்கும், தெற்கு எல்லையாக ஏறாவூர்பற்றும், மேற்கு எல்லையாக பொலநறுவை மாவட்டமும், கிழக்கு எல்லையாக இந்துசமுத்திரத்தின் கடற்பரப்பும் காணப்படுகின்றது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எல்லைக்கே என தனித்துவமாயமைந்த பௌதிக அம்சங்களுள் ஒன்றாக இந்த குடும்பிமலை என்னும் தனிக்குன்று முக்கியம்பெறுகின்றது. நிலவளவைத் தேசப்படத்தில் ஒரு வெளயிரும்புப்பாரறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், வறோன்ஸ் கப் என்ற பெயரிலும் காட்டப்பட்டுள்ளது.  குடும்பிமலையினுடைய தனி அமைவிடத்தை நோக்கினால் வடஅகலாங்கு 7 பாகை 50 கலையிலும் கிழக்கு நெட்டாங்கு 81 பாகை 24 கலையிலும் அமைந்து காணப்படுகின்றது.


20 மீற்றர் தொடக்கம் 40 மீற்றர் வரையிலான உயரத்தைக் கொண்ட ஒரு சமவெளியும், ஓரளவிலான தொரலை நிப்பரப்பிலும் இந்த மலைக்குன்றானது அமைந்திருக்கின்றது. அண்ணளவாக 2 சதுரகிலோமீற்றர்கள் பரப்பளவையுடயையதும், கடல்மட்டத்திலிருந்து  மேற்பட்ட  217 மீற்றர்   உயரத்தையும் கொண்டு காணப்படுகின்றது.

குடும்பிமலையின் வடபகுதியில் சுமார் 1/2  கிலோமீற்றர் தொலைவில் குடும்பிமலைக் குளமும், மேற்குப் பகுதியில் 1/2கிலோமீற்றர் தொலைவில்  ஆத்திக்காட்டுக் குளமும், கிழக்குப்பகுதியில் 1   கிலோமீற்றர் தொலைவில் மீரானக்கடவை குளமும் அமைந்துள்ளதுடன்தென்பகுதியில் சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் தரவையூடாக கிரான் செல்லும் வீதியும் அமைந்துள்ளது.



குடும்பிலைக்கு அருகில் குறிப்பாக 1 கிலோமீற்றருக்குள் எந்தவொரு குன்றுகளும் காணப்படவில்லையென்பதுடன் 5 கிலோமீற்றருக்கு அப்பாலேயே ஏணைய மலைகள் அமைந்துகொணப்படுகின்றன. ஒரு சில உயரும் குறைந்த வெளியரும்புப் பாறைகள் இடையிடையே 1 கிலோமீற்றருக்கு அப்பாலிருந்து காணப்படுகின்றன.

குடும்பிமலைப் பிரதேசத்தை உள்ளடக்கிய வனப்பகுதியானது தற்போது குடும்பிமலை உயிரியல் பூங்கா என அழைக்கப்படுகின்றது. இந்தப் பிரதேசத்திற்குள் காடுகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாக்கப்பட்டு பேணப்படுகின்றது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இயற்கை தாவர மூடுகையை அதிகரிக்கும் திட்டத்தில் இந்த குடும்பிமலைப் பிரதேசக் காடுகளும் உள்ளடங்குகின்றன.

எனவே சுற்றிவர சமவெளி மற்றும் ஓரளவு தொடரலை நிலங்களுடன் கூடிய ஒரு பிரதேசத்தில் தனித்து அமைந்திருக்கும் குடும்பிமலையும் ஒரு எச்சக்குன்றே என்பதனை நாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

 Article By : AKSHAYAN


  

குடும்பிமலையின் உச்சிப் பகுதியின் பக்கத்தோற்றம்
 

தரவை வீதியிலிருந்து குடும்பிமலையின் பக்கத்தோற்றம்

பேரில்லாவெளி வயல் பகுதியிலிருந்து குடும்பிமலையின் பக்கத்தோற்றம்

தரவை குளத்திலிருந்து   குடும்பிமலையின் பக்கத்தோற்றம்

ஆத்திக்காட்டுக் குளத்திலிருந்து   குடும்பிமலையின் பக்கத்தோற்றம்




குடும்பிமலைக்கு அருகிலிருந்து  குடும்பிமலையின் பக்கத்தோற்றம்



குடும்பிமலையின் மேலிருந்து பார்வையிடும்போது தெரியும் நிலத்தோற்றம்





பிரதேச காடுகளை பாதுகாத்தல் தொடாபான அறிவித்தல்






Previous Post Next Post