வேலோடு மலை முருகன் ஆலயம் - மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
இலுக்குப்பொத்தானை  எனும் கிராமத்தில் அமைந்துள்ள
வேலோடு மலை எனும் பாறைக்குன்றில் அமைந்துள்ள ஆலயமே வேலோடுமலை முருகன் ஆலயம் எனப்படுகின்றது. 



 ஆலயத்தின் அமைவிடம்:



மட்டக்களப்பின்
சித்தாண்டிக் கிராமத்திலிருந்து இடப்பெயர்ச்சித் தூரம் 7 கிலோமீற்றர் அல்லது செல்தடத்
தூரம் 10 கிலோமீற்றரில் இந்த ஆலயம் அமைந்து காணப்படுகின்றது.



மட்டக்களப்பு
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மலைகள், குன்றுகள் மற்றும் பாறைக்குன்றுகள் எனப் பாறைகளுடன்
கூடிய தரைத்தோற்றமும் பரந்து காணப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
மலைக்குன்றுகளில் முக்கியமான நான்கு ஆலயங்கள் அமைந்து காணப்படுகின்றன. தாந்தாமலை முருகன்ஆலயம்
, குடும்பிமலை குமரன் ஆலயம் , குசலானமலை குமரன் ஆலயம் மற்றும் இந்த வேலோடு மலை முருகன்
ஆலயம் ஆகிய நான்கும் அவையாகும். அந்தவகையில் சித்தாண்டி. இலுக்குப்பொத்தானை கிராமத்தில்
சுமார் 125 அடி உயரத்தில் வேலோடு மலை முருகன் ஆலயம் அமைந்துள்ளது.



ஆலயத்திற்கு  அடைவதற்கு சித்தாண்டி அல்லது மாவடிவேம்பு அல்லது
வந்தாறுமூலை ஆகிய கிராமங்களூடாக வருகை தருவது இலகுவானதாகும். பொதுவாக இக்கிராமங்களிலிருந்து
பாதைவழியான செல்தடத் தூரமானது 10 கிலோமீற்றர்கள் வரையில் காணப்படுகின்றது.
  இக்கிராமங்களிலிருந்து முதலில் சந்தணமடு ஆற்றுப்
பிரதேசத்தை அடையவேண்டும்.
 அங்கிருந்து  வேரம் திடல் சந்தியை அடையவேண்டும். அச்சந்தியிலிருந்து,
இடப்பக்கமாக இலுக்குப்பொத்தானை எனும் கிரமத்தை நோக்கி செல்ல வேண்டும். இலுக்குப்பொத்தானை
யில் பாடசாலை அமைந்துள்ள இடத்திற்கு சற்றுமுன்னால் வலப்பக்கமாக
 குளத்திற்கு செல்வதற்கான  பாதை வரும். அப்பாதை வழியே சென்று குளக்கட்டிற்கு
இடையில் இருந்து இடது பக்கமாக திரும்பிசென்று யானைவேலியின் நுழைவு எல்லையை அடைய வேண்டும்.
அங்கிருந்து சுமார் 500 மீற்றர்கள் காட்டுப் பாதைவழியே செல்கின்றபோது வேலோடு மலை முருகன்
ஆலயம் காட்சியளிக்கும்.


காட்டிற்கூடாக
ஆலயத்திற்கு செல்லும்போது
  பிள்ளையார் பந்தல்
ஒன்று பாரைதயின் வலது பக்கத்திலும் அதற்கு முன்னால் நீரருந்தக்கூடிய கிணறு ஒன்றும்
காணப்படும். கிணற்றில் நீரருந்தி, கால் கை கழுவி விட்டு ஆலயத்திற்கு செல்லலாம்.
  கிணற்று நீரானது மிகவும் சுத்தமானதாகவும் பசுமையானதாகவும்
காணப்படுகின்றது.



 



ஆலயத்தின்
மேலதிக தகவல்கள்

முருகனின் வேலானது மலையின் சில இடங்களில் பதிந்து சென்றுள்ளமையினால் இதற்கு வேலோடு மலை என அழைக்கப்படுவதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை வேலோடு
மலை முருகன் ஆலயத்திற்குரிய நிருவாக சபையினர் சித்தாண்டி மற்றும் ஆலயத்தைச் சுற்றியுள்ள
கிராமத்தைச்சேர்ந்தவர்கள் என்பதுடன், ஆலயத்தை சிறப்பான முறையில் நிருமாணித்தும் பராமரித்தும்
வருகின்றனர். தாந்தாமலை ஆலயத்தினை அடியொற்றியதாக ஆலய அமைப்பு காணப்படுகின்றது.



இவ்
ஆலயமானது புராதன காலத்தில் வாழ்ந்த சித்தர்களினால்  வழிபடப்பட்டு வந்ததாகவும், இப்பிரதேசத்தை அண்டிய
பிரதேசத்தில் ஆரமட்பத்தில் வேடுவ இனத்தவர்களே அதிகளவில் வாழ்ந்ததாகவும் பிரதேச வாசிகள்
குறிப்பிடுகின்றனர். அத்துடன் இவ் ஆலயத்தைச் சுற்றி பாதுகாப்பாக வன ஜீவராசிகள் மற்றும்
நாகபாம்புகளும் பாதுகாப்பாக இருக்கின்றன எனக் கூறப்படுகின்றது.



மேலும்
இவ் ஆலயம் அமைந்துள்ள மலைப்பகுதிக்கு அண்மித்து இன்னும் இரண்டு சிறு மலைகள் காணப்படுகின்றன.
இவற்றில் ஒன்றில் ஆரம்ப காலங்களில் சித்தர்கள் மற்றும் சிற்றரசர்கள் வாழ்ந்தமைக்கான
சான்றுகளும் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.



 



தொகுப்பு: 

அக்‌ஷயன், மட்டக்களப்பு
















Previous Post Next Post