சித்தாண்டிப் பிரதேச உறவுமுறைக் கட்டமைப்பு

              
இக்கட்டுரையினூடாக சித்தாண்டி எனும் கிராமத்தின் உறவுமுறை அமைப்பு தொடர்பாக சமூகவியல் மற்றும் மானிடவியல் நோக்கில் ஆராயப்பட்டு அது தொடர்பான தகவல்களை கொண்டமையும் கட்டுரையாக அமையவுள்ளது.
இதனடிப்படையில் நாம் முதலில் சித்தாண்டி எனும் கிராமத்தின் அமைவிடம் மற்றும் இதர விடயங்கள தொடர்பாக பார்க்க வேண்டும்.

    சித்தாண்டி எனும் கிராமம் இலங்கையின் (sri lanka) கிழக்கு மாகாணத்தில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலகத்தில் அமைந்து காணப்படும் அழகிய கிராமமாகும். இது மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே சுமார் 19km வரையான தூரத்தில் அமைவு பெற்றுள்ளது. சித்தாண்டி வடக்கே உப்பாறு என அழைக்கப்படும் அழகான ஏரியினையும் (இவ்வாறானது சந்தனமடு ஆறு என அழைக்கப்படும் ஆற்றின் கிழையாறாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு மாரி காலங்களில் பெருக்கெடுத்து இப்பிரதேச மக்களை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது) கிழக்கே முறக்கெட்டாஞ்சேனை எனும் கிராமத்தினையும் தெற்கே மாவடிவேம்பு எனும் கிராமத்தினையும்,
    
இங்கு நான்கு கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் இங்கு பிரதானமாக விவசாயம் (நெல், சேனைப்பயிர்செய்கை, தோட்டப்பயிர்செய்கை, மீன்பிடி, மந்தை வளர்ப்பு) விறகு சேகரித்தல் தொழிலும் சிறு குடிசைத்தொழில்களும் (சட்டி பானை வனைதல், செங்கல் சுடுதல்) இடம்பெறுகின்றன. அதிகமான மக்கள் கூலித்தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர்.
   
 இங்கு வாழும் மக்கள் பெரும்பாண்மையாக (99.9%) இந்துக்களே காணப்படுகின்றனர். இதனால் இங்கு இந்து ஆலயங்களே காணப்படுகின்றது. இங்கு வாழும் மக்களின் பண்பாட்டில் ஆலயங்கள் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இக்கிராமத்தில் ஒரு உயர்தர பாடசாலையும் (மட்/கல்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம்) மூன்று ஆரம்பப் பாடசாலைகளும் காணப்படுகின்றன. இப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சியில் இப்பாடசாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    
சித்தாண்டி முருகன் கோவில்
இன்றைய காலகட்டத்தில் இக்கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
   
 இக்கட்டுரையின் பிரதான விடயத்தினுள் செல்லும் முன் உறவுமுறை தொடர்பாக சிறிது பார்ப்போம். மனித குலம் தோன்றி சில காலங்களுக்கு பின்பு சமூகத்தில் ஏற்பட்ட பல்வேறு குழப்ப நிலைமைகளை தீர்க்கும் பொருட்டு உறவுமுறை என்னும் சமூக அமைப்பு தோற்றம்பெற்று விட்டது. இன்று உறவுமுறை என்னும் அமைப்பினை அடிப்படையாகக் கொண்டே அனேக சமுதாயங்கள் உயிரோடுவதனை காணலாம். பல தேவைகளினை நிறைவு செய்யும் பொருட்டு உறவுமுறை என்னும் அமைப்பானது சமூகத்தினுள் நிலை கொண்டுள்ளது. இதனடிப்படையிலேயே பல்வேறு சமூகவியல் மானிடவியல் அறிஞர்களும் உறவுமுறை என்னும் அமைப்புக்கு முக்கிய இடம்கொடுத்து பல ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்கள். சமூகத்தில் காணப்படும் குடும்பம், திருமணம், மரபுமுறை, குடிவழி, போன்ற பல குழுக்களை ஆராயும் போது உறவுமுறை ஆய்வுகளே பெரிதும் இங்கு துணை புரிகின்றன.

    மனிதர்கள பலர் கூட்டாக சேர்ந்து வாழ முற்படும் போதுதான் உறவுமுறை அமைப்பு உருவாகின்றது. அந்தவகையில் ஓர் ஆணும் ஓர் பெண்ணும் இணைந்து வாழ முற்படும் போதுதான் உறவுமுறை எனும் அமைப்பு தொடங்குகின்றது.
   
"Robin fox" எனும் அறிஞர் உறவுமுறை பற்றி கூறும்போது 'ஒவ்வொரு தனிமனிதனிடமும் தத்தமது தேவைகளை பூர்த்தி செய்கின்ற இடத்தில் ஏற்படுகின்ற தொடர்பு உறவுமுறையாகும்' என கூறுகின்றார்.

    இது போன்று மேலும் பல அறிஞர்கள் உறவுமுறை தொடர்பான பல கருத்துக்களை முன்வைத்துள்ளமையை காணமுடியும். இதனடிப்படையில் நாம் சித்தாண்டிப்பிரதேசத்தின்  உறவுமுறை கட்டமைப்பு தொடர்பாக ஆராய்வோம்.
    
சித்தாண்டிப்பிரதேசமானது முற்றுமுழுதாக தமிழர்களினையும் தமிழர்களின் கலாசாரம் பண்பாட்டினையும் கொண்டு காணப்படும் பிரதேசமாகும். இதனால் இங்கு உலக உறவுமுறை வகையில் ஒன்றான இராகுவோய்ஸ் முறையமைப்பினையே காணமுடியும். அதாவது சித்தாண்டிப்பிரதேச மக்கள் தாய்வழி மரபினையும், தந்தை வழி மரபினையும் கொண்ட இருவழி உறவுமுறை அமைப்பே இங்கு காணப்படுகின்றது.
    
இப்பிரதேசத்தின் உறவுமுறையமைப்பானது திருமணம் மற்றும் குடும்ப அமைப்புக்களை அடிப்படையாக கொண்டே காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் அதிகமாக தனிக்குடும்ப அமைப்பினை காணமுடியும். எனினும் சில குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாகவும் காணப்படுகின்றன.
    
சித்தாண்டியில் சில கலாசார பண்பாட்டு விடயங்கள் குடும்பங்கள் ஊடாகவே கடத்தப்படுகின்றன. மேலும் குடும்பங்கள் அனைத்தும் ஒரு சமூக்த்தொகுதியாக இணைக்கப்பட்டுள்ளமையை காணலாம். அதாவது உறவினர்களே அருகருகே குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டு வாழ்கை நடாத்துவதினை காணமுடியும. இங்கு குடும்ப உறுப்பினர்களாக தாய், தந்தை, பிள்ளைகள் மேலும் பெற்றோர்களின் சகோதரர்கள், பெற்றோரின் தாய், தந்தையர்கள் போன்றோரே காணப்படுகின்றனர்.
    
இப்பிரதேசத்தில் குடும்ப அமைப்புக்களானது முக்கியத்துவம் பெற்றுக்காணப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு தனிமனித வாழ்கை முன்னேற்றத்திலும் குடும்பம் என்னும் நிறுவனம் முக்கியத்துவம் பெற்றுக்காணப்படுகின்றது. இதனை பின்வருமாறு காணலாம்.
    
குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் இடமாக குடும்ப அமைப்பு காணப்படுகின்றது. பிள்ளைகள், வயது முதியவர்கள், வலது குறைந்தோர், முதலானோர் குடும்ப உறுப்பினர்களால் பராமரிக்கப்படுகின்றமையினை இங்கு அவதானிக்கமுடியும்.
    
குடும்பத்தில் காணப்படும் உறுப்பினர்களின் ஒத்துழைப்பினாலேயே குடும்ப உறுப்பினர்களுக்கான பொருளாதார தேவைகள் நிறைவு செய்யப்படுவதனை இங்கு அவதானிக்க முடியும். உதாரணமாக இப்பிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆடைகள், உணவுப்பொருட்கள் போன்றவை குடும்ப அங்கத்தவர்கள் ஈட்டும் பணத்தினை கொண்டே பெற்றுக்கொடுப்பதனை அவதானிக்க முடியும்.
    
இப்பிரதேசத்தின் குடும்ப அமைப்பினூடாக அன்பு, பாசம் என்பன பரிமாற்றப்படுவதினை அவதானிக்கலாம். கணவன் - மனைவி இடையேயான அன்பு, பெற்றோர் – பிள்ளைகள் இடையேயான அன்பு போன்றவை பரிமாற்ப்படுவதினை கூறலாம். இதன் வெளிப்பாட்டினை இப்பிரதேசத்தின் மரண வீடுகளில் இடம்பெறும் இறுதிக்கிரியைகளின் போது உறவினர்களின் அழுது புலம்பல் செயற்பாட்டினூடாக அவதானிக்க முடியும். பிள்ளைகளின் கல்வியினை பெற்றுக்கொடுப்பதில் குடும்பம் என்னும் அமைப்பு இப்பிரதேசத்தில் முக்கிய செல்வாக்குப் பெற்று காணப்படுகின்றது. எனினும் சில குடும்பங்களில் பிள்ளைகளுக்கான கல்வியினை பெற்றுக்கொடுப்பதில் பெற்றோர்கள் அக்கறை காட்டாமையினையும் அவதானிக்க முடியும். பாடசாலைகளில் சேர்த்து விடுவதினாலேயே தமது பொறுப்புக்கள் முடிவடைந்து விடுகின்றன என தவறாக கருதுகின்றமையே இதற்கான காரணமாகும். சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதினையும் காணலாம். தமது விவசாயத்தில் ஈடுபடுத்தல், மந்தைமேய்த்தல் தொழிலில் ஈடுபடுத்தல், போன்றவற்றினையும் அவதானிக்க முடியும்.
    
அடுத்து இப்பிரதேசத்தில் காணப்படும் மரபுரீதியிலான அமைப்பினை பார்ப்போம். அனைத்து வகையான சமூகங்களிலும் மரபுமுறையமைப்பு முக்கியத்துவம் பெற்றுக்காணப்படுகின்றது. மேலும் மரபுமுறையமைப்பே உறவுமுறையினை தீர்மானிக்கும் காரணியாக அமைந்தும் காணப்படுகின்றது. இதனடிப்படையில் இப்பிரதேசத்தில் இருவழி மரபுமுறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றது.
   
 இருவழி மரபுமுறை எனப்படுவது ஒருவர் தமது குடிவழியினை பார்க்கும் போது தமது குடிவழியினை தந்தை வழியிலும் தாய்வழியிலும் சமமாக இணைத்து நோக்குவதினையே குறிக்கின்றது. அதனடிப்படையில் சித்தாண்டிப் பிரதேச மக்கள் தமது குடிவழியினை தாய் வழியிலும் தந்தை வழியிலும் சமமாக இணைத்து நோக்குவதினை காணலாம். இதணை இப்பிரதேச மக்களின் குடும்பங்களின் நடக்கும் இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளும் போது இரு வழி உறவினர்களுக்கும் சமமான அந்தஸ்தினை வழங்குவதினூடாக அறிந்து கொள்ளலாம். மேலும் இங்கு சில குடும்பங்களில் திருமண முறையினை தீர்மானிக்கும் போது தந்தை வழி முறையானவர்களுக்கும், தாய்வழி முறையான மணமக்களும் இணைந்து கொள்வதினை அவதானிக்க முடியும்.
    
மேற்;கூறப்பட்டவற்றினை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது சித்தாண்டிப் பிரதேசத்தில் இருவழி உறவுமுறையமைப்பே பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றது என கூறலாம். அடுத்ததாக இப்பிரதேசத்தில் பயன்படும் உறவுமுறைச் சொற்கள் பற்றி பார்ப்போம்.
    
அனைத்து சமுதாயங்களிலும் உறவுமுறை அமைப்பில் உறவுமுறைச் சொற்களே முக்கியத்துவம் பெற்றுக்காணப்படுகின்றன. அதனடிப்படையில் சித்தாண்டி பிரதேசத்தில் பயன்படும் உறவுமுறைச் சொற்கள் தமிழர் உறவுமுறைச் சொற்களாக காணப்படுகின்றன. இவை உலக ரீதியிலான உறவுமுறை வகைப்பாட்டினுள் இராகுவோய்ஸ் முறையையே அடியொற்றியதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
    
இராகுவோய்ஸ் முறையமைப்பின் உறவுமுறைச் சொற்களினை விளக்கும் வரைபடமானது பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது. இவ்வரைபடமே சித்தாண்டிப்பிரதேச உறவுமுறைக்கட்டமைப்புக்கும் பொருந்தும்.
 மேற்கூறப்பட்ட வரைபடத்தின்படி இலக்கங்களால் காட்டப்படும் உறவுமுறையானது பின்வருமாறு காணப்படுகின்றது.
1 – தந்தை, தந்தையுடன் பிறந்த சகோதரர்கள்
2 - தாய், தாயுடன் பிறந்த சகோதரிகள்
3 – தந்தையுடன் பிறந்த சகோதரிகள்
4 – தாயுடன் பிறந்த சகோதரர்கள்
5 – உடன்பிறந்த சகோதரர்கள், பெற்றோரின் ஒத்தபாலினரான சகோதரர்களின் ஆண்         மக்கள்
6 – உடன்பிறந்த சகோதரிகள், பெற்றோரின் எதிர்பாலினரான சகோதரர்களின பெண் மக்கள்
7 – பெற்றோரின் எதிர்பாலினரான சகோதரர்களின் ஆண் மக்கள்
8 – பெற்றோரின் எதிர்பாலினரான சகோதரர்களின் பெண் மக்கள்

 மேற்கூறப்பட்டவற்றுக்கமைவாக இப்பிரதேசத்தின் உறவுமுறை சொற்களானது பின்வருமாறு காணப்படுகின்றமையை காணலாம். இது வரைபடத்தில் காணப்படும் இலக்கங்களுக்கு அமைவாக தரப்படுகின்றது.
1 – அப்பா, சித்தப்பா, பெரியப்பா
2 – அம்மா, சின்னம்மா, பெரியம்மா
3 - மாமி
4 - மாமா
5 – அண்ணா, தம்பி
6 – அக்கா, தங்கை
7 - மச்சான், அத்தான்
8 – மச்சாள்

 மேற்கூறப்பட்ட உறவினை விட இப்பிரதேசத்தில் கிளைவழி விரிந்த உறவினர்களை குறிப்பிட மேலும் பல சொற்கள் வழக்கத்தில் உள்ளதினை காணலாம். இதனடிப்படையில் அதனை பின்வருமாறு காண்போம்.
•    அப்பப்பா – தந்தையின் தந்தை
•    அப்பம்மா – தந்தையின் தாய்
•    அம்மம்மா – தாயின் தாய்
•    அம்மப்பா – தாயின் தந்தை
•    மச்சான், அத்தான் – சகோதரியின் கணவன், சகோதரரின் மைத்துனன், கணவனின் சகோதரன்
•    மச்சாள் - சகோதரரின் மனைவி, மனைவியின் சகோதரி
•    மாமா - இரத்தவழி அமைந்த மாமியின் கணவன்
•    மாமி - இரத்தவழி அமைந்த மாமாவின் மனைவி
•    பெரியப்பா - இரத்தவழியமைந்த பெரியம்மாவின் கணவன்
•    பெரியம்மா - இரத்தவழி அமைந்த பெரியப்பாவின் கணவன்
•    சித்தப்பா - இரத்தவழி அமைந்த சித்தியின் கணவன்
•    சித்திஃசின்னம்மா - இரத்தவழியமைந்த சித்தப்பாவின் மனைவி

    மேற்கூறப்பட்டவாறு இப்பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் உறவுமுறை சொற்கள் பற்றிய விளக்கத்தினை கண்டோம். 
                                                                                           தொடரும்........
ஆக்கம்
அ.பிரசாந்தன்
கிழக்குப் பல்கழைக்கழகம்

Previous Post Next Post