தனது கல்வி நிலையத்திற்கு மாணவர்களை மிரட்டி அழைக்கும் பாடசாலை ஆசிரியர்

வவுனியா பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற சில ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கின்றனர். இவர்கள் தமது பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை தாம் கற்பிக்கும் கல்வி நிலையங்களுக்கு வரவேண்டும் எனவும் தனியார் கல்வி நிலையங்களில் தம்மிடமே வந்து கற்க வேண்டும் எனவும் வற்புறுத்தி வருகின்றனர். இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பாடசாலையில் கற்பிக்கின்ற ஒரு சில ஆசிரியர்கள் பாடசாலையில் ஒழுங்கான முறையில் கற்பிக்காதும் மாணவர்களுக்கு தெளிவு படுத்தாதும் விடுவதுடன் தனியார் கல்வி நிலையங்களில் சிறப்பான முறையில் கற்பிக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கும் சம்பளத்திற்கு விசுவாசம் காட்டாது அதனை உத்தியோகமாக வைத்துக் கொண்டு தனியார் துறைகளில் மக்களை சுரண்டி உழைக்கின்றனர்.

தம்மிடம் வந்து கல்வி கற்காத மாணவர்களுக்கு பாடசாலைப் பரீட்சைகளில் புள்ளிகளை குறைந்து வழங்குதல், அவர்களை ஏசுதல் மற்றும் தண்டித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மாணவர்கள் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் போது மாணவர்கள் தவறு செய்வதில் என்ன தப்பு இருக்கிறது? என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது இவ்வாறு இருக்க, வவுனியாவிலுள்ள ஒரு பிரபல கல்லூரியின் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் இவ் வருடம் கல்விப் பொதுச்சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்கு ஒன்றினை தனியார் கல்வி நிலையத்தில் நடத்தப் போவதாக பாடசாலையில் அறிவித்துள்ளதுடன் அனைத்து மாணவர்களும் வரவேண்டும் எனவும் அவ்வாறு வராவிட்டால் அவர்ளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்படாது எனவும் எந்த கொம்பனிட்ட சொன்னாலும் இது தான் சட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மாணவர்கள் இறுதிப் பரீட்சை நெருங்கும் நேரத்தில் தமது அனுமதி அட்டைகள் கிடைக்காது போய்விடுமோ என அச்சமடைந்து வெறுப்புடன் கருத்தரங்கில் கலந்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலவச கருத்தரங்கு எனக் கூறிவிட்டு மாணவர்களிடம் 30 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது நல்லதொரு ஆசிரியருக்கு அழகான செயற்பாடா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் சிலருக்கு பாடசாலைகள் இல்லையெனில் அவர்கள் வண்டவாளம் தெரியும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மாணவர்கள். இச் செயற்பாடுகள் தொடர்பாக பல பெற்றோர்கள் விசனம் அடைந்துள்ளதுடன் இது தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விட்டுள்ளனர்.

Previous Post Next Post