ரஷ்யாவில் படிக்கும் ஒரு மாணவன் உங்களுடன் பேசுகின்றான்:-
"ரஷ்யாவில் பெரும்பாலான பரீட்சைகளுக்கான அதிகபட்ச புள்ளி 5 ஆகும். ஒரு மாணவன் எந்தவொரு வினாக்களுக்கும் விடையளிக்காமல், வினாத்தாளை வெறுமையாக வைத்துவிட்டு பரீட்சை மண்டபத்தில் இருந்து வெளியேறிச் சென்றாலும் அவனுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
அது, மொஸ்கோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் என்னுடைய முதல் நாள். நான் இந்த முறைமையை பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. நான் கேள்விப்பட்டதும் வியந்துபோனேன். இது தொடர்பாக கலாநிதி. தியோடர் மெட்ரேவ் அவர்களிடம் வினவினேன்.
சேர், ஒரு மாணவன் எந்தவொரு வினாக்களுக்கும் விடையளிக்காமல் எவ்வாறு அவனுக்கு இரண்டு புள்ளிகள் வழங்குகிறீர்கள்?
ஏன் அவனுக்கு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்குவதில்லை?
நீங்கள் செய்வது ஏற்றுக்கொள்ள முடியுமான ஒன்றா?
அதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்."
"எவ்வாறு நாங்கள் ஒரு மனிதனுக்கு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
காலையில் ஏழு மணிக்கு எழுந்து, ஆயத்தமாகி அனைத்து விரிவுரைகளுக்கும் சமூகமளிக்கும் அவனுக்கு எவ்வாறு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
கடுமையான குளிருக்கு மத்தியில் பொதுப் போக்குவரத்தில் பயணித்து பரீட்சைக்கு சமூகமளித்து வினாக்களுக்கு விடையளிக்க முயற்சிக்கும் அவனுக்கு எவ்வாறு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
பரீட்சைக்காக இராப்பொழுதுகளை கழித்து, படிப்புக்காக என்று பென்சில், பேனை, புத்தகம், கணினி என்பவற்றை வாங்குவதற்கு அதிக பணத்தை செலவிடும் ஒருவனுக்கு எவ்வாறு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
தேவையற்ற விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை தவிர்து அறிவைத்தேடுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவனுக்கு எவ்வாறு பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியும்?
மகனே, அவனுக்கு விடை தெரியாது என்ற காரணத்தினால் எங்களால் பூச்சியம் என்ற மதிப்பீடு வழங்க முடியாது. அவனுக்கு மூளை உண்டு. அவன் முயற்சிக்கின்றான். அவன் ஒரு மனிதன் என்ற யதார்த்தத்தை உணர்ந்து எங்களால் முடிந்தளவு அவனை மதிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.
ஏனெனில் நாங்கள் வழங்கும் பெறுபேறு வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு மட்டுமானது அல்ல. அது ஊக்குவிப்பை வெளிப்படுத்தக் கூடியது, மனிதன் என்ற யதார்த்தத்தை மதித்து அவனை வளமாக பயன்படுத்துவதற்கான தகுதியை வழங்கக் கூடியது"
அந்த மாணவன் தொடர்ந்தும் பேசுகின்றான்:-
"உண்மையில் அழுதுவிட்டேன். எனக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று தெரியவில்லை. அப்போதுதான் ஒரு மனிதனாக எனது பெறுமதியை அறிந்துகொண்டேன்.
பூச்சியம் என்ற மதிப்பீடு மாணவர்களை ஊக்கப்படுத்துவதை குறைத்துவிடும். அவர்களை விரைவில் காயப்படுத்திவிடும். தங்களுடைய படிப்பை முன்னெடுத்துச் செல்வதை நிறுத்திவிடும்.
பூச்சியம் என்ற மதிப்பீடு ஒரு மாணவனுக்கு வழங்கப்பட்டுவிட்டால் அவனுக்கு குறித்த பாடத்தைப்பற்றி கவனம் எடுக்க கூடுதலான காலம் அவசியம் இல்லை. இந்த பாடத்தில் என்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இலகுவாக நினைத்துவிடுகின்றான்.
எங்களுடைய நாடுகளில் உள்ள பழைய கல்வி முறையை மாற்றவேண்டும். அந்த மாற்றத்திற்கான ஒரு செய்தியாக இந்த கதையை எங்களுடைய ஆசிரியர்களுக்கு கூறுகின்றேன்."
மூலம்:- (https://m.facebook.com/story.php?story_fbid=2814475282114533&id=100006562656989)
தமிழில்:- Fazlan Uwaiz