இலங்கையைப் பொறுத்தவரையில் 2016 ஆம் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியைப் பார்க்கிலும், குறைவான மழைவீழ்ச்சியைப் பெற்றதுடன், அதிக வெப்பநிலை மற்றும்
குளிரான பனியுடன் கூடிய காலநிலை நிலவிய
காலப்பகுதியாகக் காணப்பட்டது.
ஒரு புறம் விவசாய நடவடிக்கைகளில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன்,
பல இடங்களில் குடிநீர்ப் பற்றாக்குறையையும் பெரியளவில் ஏற்படுத்தியிருந்ததுடன், இவ்வருடத்திலும் இதனுடைய தாக்கம் காணப்படும் எனவும்
குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் வழமையாக
இலங்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியின்
அளவு மற்றும் அதன் காலப்பகுதிகளில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டிருந்ததுடன்,
குறிப்பாக வடக்குக் கிழக்கு பிரதேசங்கள் உள்ளடங்கிய
இலங்கையின் உலர்வலயப் பகுதிகளிலும் குறைவான மழைவீழ்ச்சி
கிடைத்திருந்தது. குறிப்பாக
மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சியாக
1651 மில்லி மீற்றராகக் காணப்பட, 2016 ஆம் ஆண்டில் கிடைத்த மழைவீழ்ச்சியாக
அண்ணளவாக 1238 மில்லிமீற்றராகக்
காணப்பட்டது. இதேவேளை மட்டக்களப்பில் ஏற்பட்ட வரட்சிகாரணமாக 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சுமார்
68000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி அழிவடையும் நிலையில்
உள்ளதுடன், சில விவசாயிகள் தமது நெற்பயிர்கள் நீர் இன்றி கருகியமையினால் அவற்றைக் கைவிட்டு வெளியேறியுமுள்ளனர்.
குறிப்பாக கடந்த 2010 மற்றும் 2011 ஆம்
ஆண்டுகளில் இலங்கையில் மிக அதிகளவில் மழைவீழ்ச்சி
இடம்பெற்றதுடன், உலர்வலயப்
பகுதிகள் மட்டக்களப்பு உட்பட பெரும் வெள்ள அனர்த்தத்தினைச் சந்திருத்தன. இந்த நிலைமைக்குக் காரணமாக
அமைந்தது லாநினா(La Nina)
எனப்படும் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை மாற்றம்
என்பதனை அன்றைய கால செய்திகளில் பலர்
அறிந்திருப்பீர்கள். அதேபோன்றுதான்
2015 மற்றும் தொடாச்சியாக
2016 ஆம் ஆண்டுகளில் மழைவீழ்ச்சி இலங்கையில் குறைவடைந்தமைக்கு
அடிப்படையான காரணியாக இந்த லாநினா செயன்முறைக்கு எதிரான எல்நினோ(El Nino) அமைந்துள்ளது.
2016 ஆம்
ஆண்டில் மட்டக்களப்பு உட்பட்ட பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சி குறைவடைந்தமைக்கும், வரட்சி ஏற்பட்டமைக்கும், கடும் குளிருடன் கூடிய
பனிப்பொழிவு நிலவியமைக்கும் காரணம் மத்திய பசுபிக் சமு;திரப் பிரதேசத்தில் ஏற்படுகின்ற எல்நினோ எனப்படுகின்ற
கடல்மேற்பரப்பு வெப்பநிலையின்
வேறுபாடே என்பதனை தற்போதைய ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு
எல்நினோ மற்றும் லாநினா தொடர்பாக மேலதிகமாக
அறிந்துகொள்வோம்.
எல்நினோ லாநினா
வரைவிலக்கணங்கள்:
பசுபிக் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையில்
ஏற்படுகின்ற வழமைக்கு மாறான மாற்றத்தினால் உருவாகும்
காலநிலை குழப்பநிலைமைகளே
எல்நினோ(El Nino), லா
நினா(La Nina) நிகழ்வுகளாகும்.
எல் நினோ என்பது ஸ்பானிய மொழிச்
சொல்ல்லின் படி சிறு பையன் (யேசுவின் ஆண்குழந்தை) எனவும் லா நினா என்பது சிறு பெண் (பெண்குழந்தை) எனவும்
பொருள்படும். எல் நினோ, லா நினா என்பன தென் பசுபிக் சமுத்திரத்தின் வெப்பநிலை சுழற்சியில் பங்கு வகிக்கும் ஒரு நிகழ்வாகக் காணப்படுகின்றது.
• எல்நினோ:- தென்அமெரிக்காவின்
மேற்குக் கடற்கரையின் மத்திய கோட்டுப்பகுதிக்கு அருகாமையில், மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் சமுத்திரத்தின்
வழைமையான சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையை விட
அதிகமாக அதாவது வெப்பமாகக் காணப்படும் நிலையினை
எல்நினோ எனப்படுகின்றது.
• லாநினா:- தென்அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையின் மத்திய
கோட்டுப்பகுதிக்கு அருகாமையில்,
மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் சமுத்திரத்தின்
வழமையான சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையிலும் பார்க்கக் குறைவாக அதாவது
குளிர்ச்சியாகக் காணப்படும்
நிலையினை லாநினா எனப்படுகின்றது.
பசுபிக் சமுத்திரத்தின் வழமையான காலநிலை தன்மை:
• எல்நினோ லாநினா என்பனவற்றின் உருவாக்கமானது
தென்பசுபிக் சமுத்திரத்தின் மேற்பகுதியிலே தோற்றம் பெறுகின்ற ஒரு
நிகழ்வாகக் காணப்படுகின்றது.
பசுபிக் சமுத்திரத்தில் வழமையான நிலையினை அறிந்த
கொள்வதன் மூலம் எல்நினோ, லாநினா என்பவற்றின் உருவாக்கத்தினை இலகுவாக அறிந்து கொள்ளலாம். வழமையாக
பசுபிக் சமுத்திரத்தின் மேற்கு கரை சமுத்திர பகுதிகளில் தாழமுக்க நிலைமையும் அதனால்
அதிக மழைவீழ்ச்சியும்,
மாறாக கிழக்கு கரை சமுத்திரப் பகுதிகளில்
உயரமுக்க நிலைமை காணப்படுவதுடன், இப்பிரதேசங்களில்
குறைந்தளவான மழைவீழ்ச்சியும்
கிடைக்கின்றது.
எல்நினோவின்உருவாக்கம்:-
• எல்நினோ நிகழ்வின் காரணமாக மேற்கு அயன பசுபிக் சமுத்திரத்தில்
மேற்கிருந்து கிழக்காக சமுத்திர வெப்பநிலையானது அதிகரிக்குமாறு சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை நகர்கின்றது.
இதனால் மத்திய, கிழக்கு பசுபிக் சமுத்திரத்தின்
வெப்பநிலையானது அதிகரித்து
வெப்பநிலைமையினை ஏற்படுத்துகின்றது.
இந்நிகழ்வினால் வழமையாக
பசுபிக் சமுத்திரங்களில்
காணப்படுகின்ற தாழமுக்க,
உயரமுக்க நிலைமைகள் இடம் மாறுகின்றன.
• குறிப்பாக பேரு கடற்கரையை அண்மித்த
மேற்கு பசுபிக் பகுதியில் வழமைக்கு மாறாக
தாழமுக்க நிலைமை உருவாகுவதுடன், கிழக்கு பசுபிக் பகுதியில் உயரமுக்க நிலைமையும்
தோன்றுகின்றது.
• மேற்கு பசுபிக் பகுதிகளில் இத்தாக்கத்திற்கு
பிறகு ஈரப்பதன் குறைந்து, குறைவான மழைவீழ்ச்சியைக்
கொண்ட வரண்ட நிலைமை ஏற்படுகின்றது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியா,
இந்தியா, தென்ஆபிரிக்கா முதலிய பகுதிகளுக்கு வரண்ட காலநிலையை ஏற்படுத்துகின்றது. அதேவேளை குறைந்த மழையைப்
பெற வேண்டிய கிழக்கு பசுபிக் பகுதியானது
மிதவெப்பத்துடனும், அதிக
மழையையும் பெற்றுக்கொள்கின்றது.
• எல்நினோவானது 2-
7 வருட இடைவெளியில் எப்போதாவது தோன்றும். அத்துடன்
இது 12-18 மாதங்கள் வரை நீடிக்கும்.
மேலேயுள்ள அட்டவணையினை அவதானிக்கின்றபோது எல்நினோ மற்றும் லாநினா
இடம்பெற்ற காலப்பகுதிகளை அறிந்துகொள்ளலாம். பொதுவாக மிகப்பலமான எல்நினோ நிகழ்வானது
1997-98 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் 2015-16 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றிருப்பதனை இந்த அட்டவணையிலிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த எல்நினோ நிகழ்வினாலேயே எமது
இலங்கையில் பெருமளவிலான வெப்பத்துடன் கூடிய வரட்சியான காலநிலையும், குறைந்த மழைவீழ்ச்சியும்
பனியுடன் கூடிய குளிரான காலநிலையும் நிலவியிருந்தது.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வருடாந்தம் கிடைக்கும் சராசரி மழைவீழ்ச்சியில்
அண்ணளவாக 75 சதவீதமான மழைவீழ்ச்சியே கிடைத்திருந்ததுடன்,
அதிக வெப்பமான காலநிலையின் காரணமாக அதிகமான
ஆவியாதலும் இடம்பெற்றதுடன்,
நீர்நிலைகளின் நீர் கொள்திறனும் குறைவடைந்து
காணப்பட்டது.
தற்போது பசுபிக் சமுத்திரத்தில் எல்நினோ நிலைமை பலவீனமமைடந்து அது லாநினா நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றபோதிலும்,
வருடத்தின் முதல்காற்கூறில்
அல்லது இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்திலிருந்தே லாநினா நிலைமையாக முழுமையாக
மாற்றமடையும் எனவும் அதுவரை இது நடுநிலையில் காணப்படும் எனவும் செய்மதிப் படங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரட்சியான காலநிலைத் தன்மை
எல்நினோ மாற்றத்தினால் பொதுவாக இலங்கையில் படிப்படியாகக்
குறைவடையக் கூடிய நிலைமை உள்ளதனை லாநினாவின்
வரவு எடுத்துக் காட்டுகின்றது. எனினும் இலங்கையின்
ஈரவலயத்திற்கு இதன்
சாதகதன்மைகளை இன்னும் சில மாதங்களில் அனுபவிக்க
முடியுமாயினும், இலங்கையின்
வரண்ட பிரதேசங்களின் நீர்ப்பற்றாக்குறை மற்றும் விவசாய நடவடிக்கைளில் 2016 ஆம் ஆண்டு வருட குறைந்த மழைவீழ்ச்சியுடனான காலநிலைமை செல்வாக்கு இவ்வருட முற்பகுதி வரை காணப்படும் என்பதில் மறுப்பதற்கில்லை.
அத்துடன், எதிர்வரும் 2017 இன் வருட இறுதிக் காலப்பகுதிகள்
மற்றும் 2018 இன் ஜனவரி, பெப்ரவரி மாதப்பகுதிகள்
வரை வடகீழ் பருவக்காற்றின் செல்வாக்கால் மழையை அனுபவிக்கும் மட்டக்களப்பு
உட்பட்ட பிரதேசங்கள் வெள்ளத்தை எதிர்நோக்கி தயார்படுத்திக்
கொள்ளவேண்டிய தேவையும் லாநினாவின் வரவு குறிப்பிட்டு நிற்கின்றது.
By Akshayan