தற்போது பெய்து வரும் மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை மற்றும் உறுகாமம் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.டி.மோகனராஜ் தெரிவித்தார்.
உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டு நான்கு அங்குலத்துக்கு நீர் பாய்வதாகவும், உறுகாமம் குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன் இந்த குளத்திலிருந்து 28 அங்குலத்துக்கு நீர் பாய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இக்குளங்களில் இருந்து பாயும் நீரினால் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
இதனால் தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்லுமாறும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
முந்தணி ஆற்றின் நீரெந்து பிரதேசங்களுள் ஒரு பகுதியான பதுளை கும்புக்கன் ஓயா பிரதேசங்களில் கடும்மழை பெய்து வருவதுடன் அங்கிருந்த கும்புக்கன் ஓயா குளத்தின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளமையினால் தொடர்ந்தும் முந்தணி ஆற்று நீர்மட்டம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.