யானை தாக்குதலில்13 பேர் கடந்த வருடம் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டு டிசெம்பர் தொடக்கம் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் வரையான காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைத் தாக்குதலினால் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் உறுப்புக்களை இழந்தும் காயமடைந்தும் உள்ளனர் என்று மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை யானைத் தாக்குதல்களினால் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலக பிரிவில் கி.கனகசபை, ந.கதிர்காமத்தம்பி, சோ.முத்துலிங்கம் ஆகிய மூவரும் மரணமடைந்துள்ளனர்.

ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச செயலக பிரிவில் சி.சின்னவன், ஜோ.தஸ்மில், சி.விநாயமூர்த்தி ஆகிய மூவரும் மரணமடைந்துள்ளதுடன் அ.ஆசிர்வாதம் காயமடைந்துள்ளார்.

போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலக பிரிவில் சா.சரவணமுத்து, கா.கணேசமூர்த்தி, செ.இராசநாயகம் ஆகிய மூவரும் மரணமடைந்துள்ளனர்.  மண்முனைதென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகப் பிரிவில் சி.பொன்னுத்துரை, கே.பேகேஸ்வரன் ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளதுடன் மா.அழகுராசா காயமடைந்துள்ளார்.

கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலக பிரிவில் எ.வள்ளியம்மை மரணமடைந்ததுடன் வ.இராசலிங்கம், கோ.பத்மநாதன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகப் பிரிவில் க.ரவீந்திரசிங்கம் மரணமடைந்துள்ளார்.

மொத்தமாக 13 பேர்  மாவட்டத்தில் இறந்தும் 7 பேர் காயமடைந்தும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மேய்ச்சல் தரைகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் அவற்றிற்கான போக்குவரத்துக்களை மேற்கொள்ளும் சமயத்திலேயே யானை தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

யானை தாக்குதல் காரணமாக சுமார் 45 வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளன. தற்சமயம் யானைகளின் நடமாட்டம் அதிகமாக வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் 7ஆம் வட்டாரம், செல்வாபுரம் கொலணி (38), நவகிரிநகர், தளவாய்க்காடு, திக்கோடை, சுரவணையடியூற்று, விவேகானந்தபுரம் ஆகிய இடங்களிலும் பட்டிப்பளை  பிரதேச செயலாளர் பிரிவில்  கெவிளியாமடு,  கச்சைக்கொடி,  40ஆம் கட்டை, தாந்தாமலை போன்ற இடங்களிலும், அதிகரித்துள்ளது.

வவுணதீவுப் பிரதேச செயலக பிரிவில் உன்னிச்சை, கரவெட்டியாறு, இராசதுரைநகர், நெடியமடு, பன்சேனை, கண்டியனாறு, காந்திநகர், இருநூறுவில், சிப்பிமடு, பாவற்கொடிச்சேனை, கண்ணகிநகர், மாவிலங்கண்டடிச்சேனை, ஊத்துமடு, கற்பக்கேணி, பத்தரக்கட்டை, ஆகிய இடங்களிலும், செங்கலடிப் பிரதேச செயலகப்பிரிவில் ஈரளக்குளப்பகுதி பெரியபுல்லுமலை மாந்தோட்டம், கொச்சித்தோட்டம், உறுகாமம்,  கிரான்புல் அணைக்கட்டுக்கு மேற்பகுதியிலுள்ள அத்தவளக்காட்டை  சுற்றியுள்ள பகுதிகளிலும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வடமுனை, ஊத்துச்சேனை, புலிபாய்ந்தகல், அத்தவளக்காட்டிற்கு கீழ் பகுதி ஆகிய இடங்களிலும் வாகரை பிரதேச செயலாளர்பிரிவில்  ஓமடியாமடுப்பகுதி மதுரங்கேணி குளப் பகுதி போன்றவற்றிலும் இந்த காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
Previous Post Next Post