அமரர் த.திவ்வியராஜ் அவர்களின் நினைவுதினம்

மாவடிவேம்பை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்      தங்கராசா - திவ்வியராஜ் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாளை (22.12.2012) ஆகும். தங்ககராசா - சிவம்மா ஆகியோரின் புதல்வனாக 03.07.1972 அன்று உதித்த அமரர் திவ்வியராஜ் அவர்கள் கடந்த  22.12.2012 அன்று காலமாகியிருந்தார். 

பொருளியல் துறையில் பல மாணவர்களை உருவாக்கிய இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளராகவும் தனது இறுதிக் காலத்தில் கடமையாற்றியிருந்தார். 






அறிமுகம்:-

நிலம், உழைப்பு, மூலதனம், முயற்சியாண்மை, என்கின்ற நான்குமே பொருளியலாளர்களினால் 'பொருளியல் வளங்கள்' என வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மூலதனமானது பல வகைப்பாடுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஒரு வகைப்பாடே மனித மூலதனம் ஆகும். இவ்வகையில் மனித மூலதனம் என்பது உற்பத்தி நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய விதத்தில் மனிதனிடம் காணப்படுகின்ற விசேட ஆற்றல், அனுவபம், சிறப்புத் தேர்ச்சி போன்ற சிறப்பியல்புகளையே குறிக்கின்றது. இத்தகைய மனித மூலதனமாகவும், அதை உள்ளடக்கும் பொருள் பொதிந்த பொருளியல் வளமாகவும் திகழ்ந்தவரே தங்கராஜா திவ்வியறாஜா ஆவார்.

'கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' எனும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு இணங்க கற்றவற்றைக் காலமெல்லாம் கருவியாக்கி, அவற்றைக் கசடறவே புகட்டி தன்னைப் போன்ற பல கல்விமான்களை உருவாக்கிய உத்தமனும் திவ்வியறாஜாவே ஆவார்.

அமைதியான சுபாவம், எப்போதும் புன்முறுவல், அளந்து எடுத்தால் போல் உரையாடல், எதற்கும் ஒரு ஹாஷ்யம், நன்பர்களுடன் மாத்திரம் கலகலப்பு, தனது பாதையில் தெளிவு, சிறு வயதிலே பலதைச் சாதிக்கும் வெறி, அசட்டுத்துணிச்சல், தனது முடிவில் விலகாத நிதானம், தன்னை மதிப்பவருக்கு எதையும் செய்யத்துணியும் உறுதி, சில சமயங்களில் பிடி தளராத கோபம், யாராலும் மாற்ற முடியாத முடிவுகள், தனது திறமையினை நம்புவதனால் எவருக்கும் அடிபணியத்தேவையில்லை என்ற துணிவு, இத்தகைய தன்மைகளுடன் இறுதிவரை வாழ்ந்தவரே இந்த உத்தமன்.



இவர் புகழ் பூத்த பூமியாம் சித்தாண்டி எனும் பழம்பெரும் பதியில் தங்கராஜா- சிவகாமிப்பிள்ளை தம்பதியினருக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திரெண்டாம் ஆண்டு, ஆடி மாதம், மூன்hறாம் நாள் வியாழக்கிழமை (1972. 07. 03) மூத்த குழந்தையாகப் பிறந்தார். இவரைப் பெற்றோர் 'ராசு' என்ற செல்லப் பெயர் சூட்டி அழைத்தனர். சிறு வயதிலே தாயை இழந்தாலும், தந்தையின் அயராத முயற்சியும், கண்டிப்புமே இவரை கல்வியில் உயர்த்தியது என்றால் அது மிகையாகாது.


இவரின் கல்விப் பின்னணி:-

இவர் தனது ஆரம்பக்கல்வியினை தான் பிறந்த மண்ணிலே உள்ள மட்/சித்தாண்டி இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் கற்று அதனைத் தொடர்ந்து உயர்தரம் வரை மட்/புனித மிக்கேல் தேசிய பாடசாலையிலும் கற்று கலைப்பிரிவில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். பல்கலைக்கழகத்திலும் பொருளியல் சிறப்புத் துறையில் தன்னை இணைத்துக் கொண்டு பருவத் ( Semester) தேர்வுகளிலும் சிறந்த பெறுபேற்றுடன் Second Class Upper Division இல் சித்தி பெற்ற பெருமைக்குரியவராவார்.


இவ்வாறு பட்டம் பெற்ற பிற்பாடு ஆசிரியராக நியமிக்கப்பட்டதனால் தனது ஆசிரியர் தரத்தினை உயர்த்திக் கொள்வதற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியில் டிப்ளோமா ( (Post Graduate Diploma in Education) பட்டத்தினையும் பெற்றதோடு மாத்திரமன்றி தான் சிறப்புப் பட்டமாக 'பொருளியல் மாணி' [B.Econs (Hons)] பட்டத்தினைப் பெற்றதனால் தொடர்ந்தும் அத்துறையில் தனது அறிவினை விருத்தி செய்ய வேண்டுமென்று அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணிப் பட்டப்படிப்பினையும் ( (Master of Development Economics)) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். அத்தோடு நின்றுவிடாது தான் ஆசிரியத்தொழிலில் இருந்து மாற்றம் பெற்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதன் காரணமாக அத்தொழிலில் தான் சிறந்த கல்வித்தரம் மிக்க ஓர் விரிவுரையாளராக வளர வேண்டும் என்ற உன்னத எதிர்பார்ப்போடு பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் முதுதத்துவமாணிப் பட்டப்படிப்பினையும் (Master of Philosophy in Economics) மேற்கொண்ட ஓர் சிறந்த கல்விமான் ஆவார்.

அமரர்: தங்கராஜா திவ்வியறாஜா

(B.Econ (Hons) (EUSL), PGDE(OUSL), MDE(EUSL), M.Phill (University 0f Peradeniya)





அண்ணாரினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள்



கல்விப் பணி

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு (1992) தான் உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்தி அதன் மூலம் தனக்குப் பல்கலைக்கழகம் செல்ல அனுமதி கிடைத்தவுடனேயே தான் பெற்ற கல்வியைப் பிறரும் பெற வேண்டும் என்ற நோக்கோடு வாழைச்சேனை தொடக்கம் திருக்கோவில் (அக்கரைப்பற்று) வரைக்கும் உள்ள பல பிரத்தியேகக் கல்வி நிலையங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் மூலம் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கு சாதி, மத பேதமின்றி பொருளியல் அறிவினை ஊட்டிப் பல மாணவர்களைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

இவ்வாறு பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி வரும் வேளையில் இவர் இரண்டாயிரமாம் ஆண்டு சித்தாண்டியில் அமைந்துள்ள மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு ஆசிரியராக முதல் நியமனம் பெற்று எமது மண்ணுக்கு ஓர் வரப்பிரசாதமானார். ஆசிரிய சேவையின் போது இவர் பொருளியல் துறையில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு பொருள் பொதியக்கூடிய விதத்தில் தெளிவு பெறத் தவிக்கும் நிகழ்கால மாணவர்களுக்கு கற்றலில் ஓர் நிச்சயத்தன்மையினைப் புத்துயிரூட்டி நகைச்சுவையாகப் புகட்டுவதே சிறந்த மருத்துவம் எனக் கண்டு கொண்டார். இவ்வாறாக இவர் பொருளியல் பாடம் மாத்திரமன்றி சமூகக்கல்வி, வரலாறு, போன்ற பாடங்களையும் மாணவர்களுக்கு தனது ஆசிரிய சேவையின் போது கசடறவே புகட்டினார்.



இவ்வாறு தனது ஆசிரிய சேவையை ஆறு வருடங்கள் ஆற்றி வந்த இவருக்கு இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு உதவி விரிவுரையாளராக கிழக்குப்பல்கலைக் கழகத்துக்கு நியமனம் கிடைத்தது. அங்கு சென்ற இவர் கலை கலாசார பீடத்தில் ( (Faculty of Arts & Culture) ) பொருளியல் துறையில் கல்வி கற்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் வருட மாணவர்களுக்கு வெவ்வேறுபட்ட பொருளியல் கற்கை நெறிகளைக் கற்பித்துப் பொருளியல் சிறப்புக் கலைப் பட்டதாரிகள் பலரை உருவாக்கினார். இவ்வாறு உள்வாரிப் பட்டதாரிகளை உருவாக்கியது மாத்திரமின்றி பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்புக் கிட்டாத பல மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்காக பொருளியலை ஓர் பாடமாகக் கற்பித்து வெளிவாரியாகவும் பல பட்டதாரிகளை உருவாக்கிய பெருமையும் அவருக்குண்டு.



சமூகப்பணி

தனது உயர்தரக் கல்வியை முடித்துப் பல்கலைக்கழக அனுமதியைப்பெற்ற இவர் சமூகத்தினுள் நுழைந்து பாடசாலை, கழகங்கள், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றுக்குப் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றியுள்ளார்.

அந்தவகையில் இவர் ஆசிரிய சேவையில் இருந்த போது இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு (2005)தான் கற்பித்த பாடசாலையில் கல்வி நிருவாகத்துக்குப் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டதன் விளைவாக மாணவர்களுடைய ஒழுக்காற்று நடவடிக்கைகளிலும், இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான விவாதப்போட்டி, வில்லுப்பாட்டு, வினாவிடைப்போட்டி, கல்விச்சுற்றுலா, போன்றவற்றிலும் மாணவர்களை ஈடுபடுத்தி வழிநடத்தியவராகவும், பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளின் போது சிறந்த ஓர் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார்.

அத்தோடு சித்தாண்டிக்கு அருகாமையிலுள்ள மாவடிவேம்புக் கிராமத்தில் இன்று சிறந்த முறையில் இயங்கி வருகின்ற 'சிவானந்தா' விளையாட்டுக் கழகத்தின் உருவாக்கத்திற்கு வித்திட்ட ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவராகவும், முத்தமிழ்களுள் ஒன்றான இசைத்தழிழை வளர்ப்பதற்கென்று மாவடிவேம்புக் கிராமத்திலுள்ள இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'வானம்பாடி' இசைக்குழுவில் பிரதம அறிவிப்பாளராகவும் கடமையாற்றியது மட்டுமன்றி, சித்தாண்டி- மாவடிவேம்பு பட்டதாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து பட்டதாரிகள் ஒன்றியத்தினைக் கடந்த இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு உருவாக்குவதற்கு சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கிய பெருமகானும் அவரே.

மேலும் தான் பிறந்தகாலந்தொட்டு தனது பல்கலைக்கழகக் கல்வி தொடங்கும் வரைக்கும் தனக்கு ஏற்பட்ட வறுமை நிலையினை உணர்ந்து அவ்வாறு தான் அனுபவித்ததைப் போன்று தற்போது வறுமைப்படுகின்ற (கல்வியில் ஆர்வமுள்ள) மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளையும், வழிகாட்டல்களையும் நல்கியதோடு, தற்போது சமய நிகழ்வுகளை செவ்வனே நிறைவேற்றி வருகின்ற 'யோகசுவாமி' சைவ மகளிர் இல்லத்தில் தங்கியிருந்து தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கின்ற வறிய மாணவர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதன் மூலமும் ஏழைகளின் கல்விக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.



சமயப்பணி

தன்னை ஓர் ஆன்மீக வாதியாகக் காண்பிக்காவிட்டாலும் சில விசேட பூசைகளின் போது கோயில்களிலும், பாடசாலைகளிலும் பல பணிகளைப் புரிந்துள்ளார்.

அந்தவகையில் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிய சந்தர்ப்பங்களில் சக ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் இனைந்து நவராத்திரி விரத காலங்களில் பஜனை வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, சித்தாண்டி- மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் வருடந்தோறும்; மாசி மாதம் இடம்பெறுகின்ற மகாசிவராத்திரியின் இரண்டாம் சாம இலிங்கோற்பவ பூசையினை நடாத்தி வருகின்ற இறைபக்தனாகவும் திகழ்ந்தார்.



நூற்பணியும், ஆய்வுப்பணியும்

'யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்கின்ற வாசகத்திற்கு இணங்க தான் பெற்ற பொருளியல் அறிவானது சந்ததி, சந்ததியாகக் கடத்தப்பட வேண்டும் என்ற நோக்கோடு சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள், கையேடுகள் போன்ற பல வெளியீடுகளை எமக்குத் தந்துள்ளார்.

அந்த வகையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டக்கூடிய விதத்தில் பாடப்பரப்பிலுள்ள ஒவ்வொரு அலகுகளையும் தனித்தனியாக அச்சிட்டு மாதாந்த இதழாக 'பொருளியல் மலர்' என்கின்ற பெயரில் தான் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் வெளியிட்டுக்கொண்டிருந்தார். இந்த இதழின் மூலம் பொருளியல் பாடத்தை உயர்தரத்துக்கு கற்பிக்கின்ற சக ஆசிரியர்களும் தெளிவடைந்தனர். அத்தோடு உயர்தர மாணவர்களுக்குரிய வினாவிடைக் கையேடு, முதன்மைப் பொருளாதாரக் குறிகாட்டிகளை உள்ளடக்கிய புள்ளிவிபரக் கையேடு போன்றவற்றையும் இலகுவான முறையில் தொகுத்து வழங்கிய பெருமைக்குரியவருமாவார்.

இவ்வாறு தான் நூற்பணியுடனும் நின்றுவிடாது பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும் பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் எழுதியுள்ளார். குறிப்பாகத் தினந்தோறும் செய்திகளைத் தாங்கி வருகின்ற வீரகேசரிப் பத்திரிகையில் 'வணிக உலா' என்ற பகுதியில் இலங்கையின் கட்டமைப்புச் சீராக்கல் கொள்கை ( (Structural Adjustment Policy in SriLanka), உலகமயமாதல் (Globalization), இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ( (Sustainable Development in SriLanka) போன்ற பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியதோடு மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படுகின்ற 'உதயம்' சஞ்சிகையிலும் பல்வேறு ஆக்கங்களை எழுதியிருக்கின்றார்.


முடிவுரை

இவ்வாறாகக் கல்விப்பணி, சமூகப்பணி, சமயப்பணி, நூற்பணி, ஆய்வுப்பணி போன்ற பல்வேறுபட்ட பணிகளிலும் தன்னை அர்ப்பணித்து பொருள் ஈட்டுவதிலும் புகழாரம் சூட்டி, இல்லற வாழ்வில் இன்புற வாழ்ந்து ஈன்றெடுத்த புதல்வர்களுக்கும், ஈன்றெடுக்காத வாரிசுகளுக்கும் எத்தனையோ விதத்தில் வழிகாட்டிவிட்டு தனது முப்பத்தேழாம் வயதில் அதாவது இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு மார்கழி மாதம் இருபத்திரெண்டாம் திகதி (2010. 12. 22) புதன்கிழமை திருவாதிரை திதியுடன் கூடிய நாளில் இவ்வுலகை விட்டு தன்னுயிரை நீத்து இறைவனடி சேர்ந்தார்.



தொகுப்பு:- E.Prabanantharajah

(மேலதிக தகவல்கள் மற்றும் ஒளிப்படங்களின் மென்பிரதிகள் உள்ளவர்கள் அனுப்பினால் இணைத்துக்கொள்ளப்படும். மேலும் கிராமத்தில் இத்தகைய விதத்தில் சமூகத்திற்குப் பணியாற்றியவர்களின் தகவல்களை எமக்கு அனுப்பினால் நிச்சயம் சேர்த்துக்கொள்ளப்படும்.)
Previous Post Next Post