வீட்டுக்கு தீ வைத்த போதும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி

நேற்று ஆரம்பமாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவரை பரீட்சைக்குத் தோற்றுவதிலிருந்து தடுக்கும் வகையில் அம்மாணவியின் வீட்டை தீயிட்டுக் கொழுத்திய சம்பவமொன்று தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


பாடசாலை உபகரணங்கள், சீருடை, பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் போன்றன தீக்கிரையாகிய நிலையிலும் அம்மாணவி தனது பாடசாலை அதிபரின் உதவியுடன் இன்றைய பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். 

தம்புத்தேகம மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜயமாலி நிஸ்ஸங்க (வயது 17) என்ற மாணவியின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அம்மாணவி தோற்றவுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முகமாக அவரது எதிரியொருவரினால் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மாணவியின் அறை முற்றாக தீக்கிரையாகியுள்ள நிலையில் அதிலிருந்த பாடசாலை உபகரணங்கள், சீருடை, பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் போன்றன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

பாடசாலை சீருடை இன்மையால் அம்மாணவி சிவில் உடையிலேயே பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். அம்மாணவியின் புகைப்படமொன்றை பாடசாலை அதிபர் அத்தாட்சிப்படுத்திக் கொடுத்த நிலையில் அவர் எவ்வித பிரச்சினையும் இன்றி பரீட்சையை எழுதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்யவேண்டிய நல்ல விடயங்கள் எத்தனையோ இருக்க மற்றவர்கள் மீது அவர்களுடைய முன்னேற்றம் மீது தடையை ஏற்படுத்தும் கயவர்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post