செங்கலடி இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய 16 வயது மகள் மற்றும் காதலன் உட்பட நான்கு பாடசாலை மாணவர்களை பொலிஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு வர்த்தகரான சிவகுரு ரகு (48 வயது)அவரது மனைவி ரகு விப்ரா(41 வயது) ஆகிய இருவரும் செங்கலடி சந்தியில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இக் கொலை இடம்பெற்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இக் கொலை தொடர்பாக விசாரணை நடாத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத் துறையினர் தேசிய புலனாய்வுத் துறையினர்,விசேட புலனாய்வு சேவை பிரிவினர் அடங்கிய 40 பேர் கொண்ட விசேட விசாரணை குழு ஒன்றினை அமைத்து விசாரணையினை மேற்கொண்டனர்.
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.இந்திரன் ஆகியொரது வழிகாட்டலில் இடம்பெற்ற விசாரணையினைத் தொடர்ந்தே கொலையினைச் செய்வதற்கு சூத்திரதாரியாக இருந்து செய்வித்த கொலை செய்யப்பட்டசவர்களது மகள் அவரது காதலன் உட்பட 16 வயதுடைய செங்கலடியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் நான்கு பாடசாலை மாணவர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்களது மகளான ரகு டக்சனா(16 வயது) பழைய ஊர் செங்கலடியைச் சேர்ந்த அவரது காதலன் பு.ஆஜேன்(16 வயது) மற்றும் இவரது நண்பர்களான கித்துள் கரடியனாற்றைச் சேர்ந்த கு.டிலக்சன்(16 வயது) சந்தை வீதி செங்கலடியைச் சேர்ந்த பு.சுமன்(16 வயது) ஆகிய நான்கு 11 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலைக்குப் பயன்படுத்திய 3 கத்தி 2 பொல்லு மற்றம் கையுறை என்பனவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர்களது மகளான ர.டக்சனாவை பு.அஜேன் காதலிப்பதையிட்டு இவர்கள் கண்டித்த போது காதலன் செய்து காட்டுறன் வேலை பாருங்கள் என கூறிச்சென்றதாக தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்தே தொடர்ந்த விசாரணையினை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இக் கொலைக்குப் பின்னணியில் யாராவது உள்ளனரா என்பது குறித்தும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இக் கொலை தொடர்பாக தெரியவருவதாவது கொலை செய்யப்பட்டவர்களது மகளே கொலையினைச் செய்ய உத்தரவிட்டுள்ளதுடன் சகல தகவல்களையும் வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது.