செங்கலடியில் நள்ளிரவில் தம்பதிகள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி விப்ரா பென்சி கோணர் உரிமையாளரும் அவரது மனைவியுமாகிய சிவகுரு ரகு, ரகு விப்ரா ஆகிய இருவருமே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இக் கொலைச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
இன்றைய தினம்(08.04.2013) நள்ளிரவு 12.30 மணியளவில் பதுளைவீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிற்கு வருகைதந்த இனம் தெரியாத நபர்கள் இவர்களை தலையில் தாக்கியுள்ளதுடன் கழுத்தில் கத்தியால் வெட்டியும் உள்ளனர் இதனால் சம்பவ இடத்திலேயே இருவரின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
செங்கலடி மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இக் கொலைச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வண்முறைகள் நிறைந்த ஒரு சூழல் உருவாகி வருவதனை அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக இளம்யுவதி கடத்தப்பட்டு தாந்தாவில் விடப்பட்டமை, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற மிகவும் மோசமான அநாகரிகமான குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன. இவை தொடர்பாக குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய நிலைமைகளை தொடர்ந்தும் காவல்துறை அனுமதிக்குமாயின், மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைதியானதும், வழமையானதுமான இயல்புநிலை கேள்விக்குறியாகிவிடும் எனவும் மக்கள் அச்சம் கொள்கின்றனர்.