சித்தாண்டி கிராமம் நான்காவது தடவையாகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 டிசம்பர் 20 ஆம் திகதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கிற்கு அடுத்ததாக இரண்டாவது தடவையாக டிசம்பர் 23 ஆம் திகதியிலும் அடுத்த வெள்ளம் ஏற்பட்டது.
புதிய வருடம் பிறந்து சில நாட்களில் குறிப்பாக கடந்த 08 ஆம் திகதி குறைந்தளவிலான வெள்ளம் ஏற்பட்டு வடிந்து சென்றிருந்த நிலையில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக மீண்டும் கடந்த 11.01.2012 இலிருந்து சித்தாண்டியின் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சித்தாண்டியில் ஏற்பட்ட முதலாவது வெள்ளத்தின்போது மட்டு – திருமலை பிரதானவீதியையும் வெள்ளம் மூடியிருந்தது. ஆனால் அதற்கடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள் பிரதான வீதியைக் கடக்கவில்லையாயினும் சித்தாண்டி 04 மதுரங்காட்டு கொலனி, சித்தாண்டி 03 இன் ஆற்றங்ரையோரம் முதலிய பகுதிகளையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது. இவ்வருடத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழையின் காரணமாக உறுகாமம் குளம் திறந்து விடப்பட்டதே இவ்வெள்ளத்திற்கு பிரதான காரணமாகும். ஏனெனில் உறுகாமம் குளத்தினால் திந்துவிடப்படுகின்ற நீர் வந்துசேரும் சந்தணமடு ஆறு மற்றும் நீர்ப்பாசனகால்வாய்களை அருகில் கொண்டிருப்பதனால் விரைவாக நீர் வந்துசேர்கின்றது.
சித்தாண்டி 04 உதயன்மூலைப் பகுதி வீதிகளில் 4 அடிவரையிலான நீர் காணப்படுவதுடன், பெரும்பாலன பள்ள நிலங்களில் ஆழமாக நீர் காணப்படுகின்றது. சித்தாண்டி 04 இற்குரிய பலநோக்கு மண்டபம் அமைந்துள்ள பகுதிகளில் 5 அடி வரையிலான நீர் காணப்படுகின்றது.
சித்தாண்டி 04 இல் அமைந்துள்ள பெரும்பாலானவர்களின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. ஒருசில மாடிவீடுள்ளவர்கள் மேல்தளங்களில் தங்கியுள்ளதுடன், பெரும்பாலான மக்கள் தமது வீடுகளை விட்டு பாடசாலை அல்லது உயரப்பகுதிகளிலுள்ள தமது உறவினர் வீடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளர். ஒரு சில வீடுகளில் வசிப்பவர்கள் தமது உடைமைகளை பாதுகாத்தல் மற்றும் மழையின்மையினால் வெள்ளநீர் விரைவாக வடிந்து விடும் என்ற நம்பிக்கை முதலியவற்றினால் தமது வீடுகளிலேயே பரண் அல்லது தளபாடங்களை ஒன்று சேர்த்து பாதுகாப்பாக தங்கியுள்ளனர். பெரும்பாலான வீடுகள் மக்கள் நடமாட்டமின்மையினால் வெளிச்சோடிபோயுள்ளதுடன், வளர்ப்பு நாய்களின் குரல்களையும் கேட்கமுடிகின்றது.
சித்தாண்டி 04 இல் உள்ள கிணறுகள் சில வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், சிலர் நீரினைப் பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தற்காலிக நீர்தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளபோதும் அவற்றில் நீரில்லாத நிலை காணப்படுகின்றது. தங்கியுள்ள பலரது வீடுகளில் சமையல் செய்வதற்கு வசதியின்மையினாலும், அன்றாடம் உழைப்பின்மையாலும் பட்டர் முதலிய வேக்கரி உணவுப்பொருட்களை உண்டு தமது பசியைப் போக்குகின்ற நிலையினையும் அவதானிக்க முடிகின்றது. மலசலம் கழித்தல், நீராடுதல், சமைத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இவ்வாறு தங்கியுள்ள மக்களுக்கு இருப்பதனை அறியமுடிகின்றது.
சித்தாண்டியில் உள்ள மத்திய மகாவித்தியாலயம் மற்றும் சில பாடசாலைகளில் மக்கள் தங்கியுள்மையாலும், உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம் போன்ற சில பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையாலும், மாணவர்களின் உறைவிடங்களில் வெள்ளம் காணப்படுகின்றமையாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் வெள்ளநீரில் விளையாடி திரிவதுடன், பெரும்பாலான முதியவர்கள் வெள்ளம் காரணமாக அவதிநிலையிலும் உள்ளனர்.
இதேவேளை பெரும்பாலான விவசாயிகளின் விளைநிலங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்கதிராகும் பருவத்தில் நீர்தேங்கி நின்றதனால் பலருடைய விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன்பட்டும், தமது உடல்உழைப்பையும் செலவு செய்து விவசயாம் செய்கின்ற மக்கள் இந்த நிலையினால் மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்படுகின்றனர். சித்தாண்டியைப் பொறுத்தவரையில் பெரும்பாலானவர்கள் வறிய விவசாயிகளேயாவர். இத்தகையவர்கள் தமது நிலத்தை நம்பியே கடன்பெற்று விவசாயம் செய்கின்றனர். இவ்வாறு கடனையே அடைக்கமுடியாதவாறு நிலமைமோசமாகின்றபோது வறுமைவட்டம் செயற்படும் நிலை தொடர்கின்றது.
தற்போது மழையின்மையினால் வெள்ளநீர் மெதுமெதுவாக வடிந்துவருவதனை அவதானிக்கமுடிகின்றது. இருப்பினும் முழுமையாக நீர் வற்றுவதற்கு 05 நாட்களாவது எடுக்கும் எனவும், பொங்கல் பொங்கமுடியாத நிலை சித்தாண்டி 04 இல் உள்ள சில மக்களுக்கு ஏற்படும் எனவும் சித்தாண்டி பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.