சேவை வரிக்கெதிராக நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்

நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு 12.36 சதவீதம் சேவை வரி விதித்து இருக்கிறது.வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் முதல் இது அமலுக்கு வந்தது.இதற்கு நடிகர்-நடிகைகள் மற்றும் திரைப்பட கலைஞர்கள், திரையுலக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

உண்ணாவிரதம்
சேவை வரியை முழுமையாக நீக்கக்கோரி, தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இதற்காக, 250 அடி நீளம், 30 அடி அகலத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகில், 1,000 பேர் அமர்கிற அளவுக்கு பெரிய பந்தல் போடப்பட்டு இருந்தது.காலை 9 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன், உண்ணாவிரதம் தொடங்கியது. உண்ணாவிரதத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாரவி வரவேற்று பேசினார்.உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் வருமாறு:
ரஜினிகாந்த்
நடிகர்கள் ரஜினிகாந்த், பாக்யராஜ், சத்யராஜ், பிரபு, விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, விஷால், ஜீவா, கார்த்தி, அர்ஜுன், பரத், பார்த்திபன், பாண்டியராஜன், எஸ்.ஜே.சூர்யா, சுந்தர் சி, விஜயகுமார், பிரகாஷ்ராஜ், அருண் விஜய், பிரசன்னா, விமல், விதார்த், கிருஷ்ணா, நகுல் அசோக், சரவணன், ராஜேஷ், எஸ்.வி.சேகர், விவேக், மன்சூர் அலிகான், செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், தியாகு, கே.ராஜன், பாபுகணேஷ், இளவரசு, பொன்வண்ணன், சிட்டிபாபு,நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி, ஸ்ரீப்ரியா, ரேகா, சினேகா, ஓவியா, மும்தாஜ், ஊர்வசி, ரம்யா கிருஷ்ணன், ரோகிணி, அபிதா, வடிவுக்கரசி, குயிலி, சத்யப்ரியா, கோவை சரளா.
நிர்வாகிகள்
நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளர் எஸ்.தாணு, டைரக்டர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, பொருளாளர் ஜனநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பிலிம்சேம்பர் செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணைச்செயலாளர் ஸ்ரீதர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம், போர் ப்ரேம் கல்யாணம், மற்றும் 24 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள், சின்னத்திரை நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டார்கள்.
சினிமா காட்சி ரத்து
நடிகர்-நடிகைகளை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தார்கள். உண்ணாவிரத பந்தலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.உண்ணாவிரதத்தையட்டி சினிமா ஸ்டூடியோக்கள் மூடப்பட்டு இருந்தன. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை.தியேட்டர்களில் காலை காட்சி மற்றும் பகல் காட்சி ஆகிய 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
கே.பாலசந்தர்
மாலை 5 மணிக்கு சரத்குமார், ராதாரவி, விஜய் ஆகியோருக்கு டைரக்டர் கே.பாலசந்தர் பழரசம் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.உண்ணாவிரதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கியும், நன்றி தெரிவித்தும் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசினார். அவர் பேசியதாவது:திரையுலகமும், தொலைக்காட்சி தொழிலும் ஏற்கனவே பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு கடந்த 1-7-2012 முதல் சேவை வரி விதித்துள்ளது.கலையுலகம் என்பது நாட்டின் நலம் காக்கும் அரிய பொக்கிஷம். சாதி, மத, இன உணர்வுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களையும் மகிழ்வித்து, நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
மத்திய மந்திரியிடம் மனு
கலை உலகின் சில பிரிவினருக்கு மட்டும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது போல், கலையுலகில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் 1-7-2012 முதல் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்த அடையாள உண்ணாவிரதம் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.திரையுலகின் அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் வருகிற 10-ந்தேதி மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து மனு கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.இவ்வாறு சரத்குமார் பேசினார்.










 
Previous Post Next Post