சித்தாண்டி பிரதேசத்து மக்களினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது விவசாய நடவடிக்கைகளாகும். பெரும்பாலான விவசாயிகளின் விவசாய விளை நிலங்கள் பெருமாவெளி, பெரியவட்டவான், ஈரலக்குளம், குடாவெட்டை முதலிய பகுதிகளில் அமைந்துள்ளன.
இப்பிரதேச விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு சந்தணமடு ஆற்றை கடந்து செல்லும் வீதி, கிரான் பாலத்தினூடான வீதி ஆகிய இரண்டையும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இருந்தும் சித்தாண்டி விவசாயிகளுக்கு மிக இலகுவாக குறைந்த தூரத்தில் செல்வதற்கு சந்தணமடு ஆற்று வீதி காணப்படுவதனால் அதிகளவில் இவ்வீதியினைப் பயன்படுத்துகின்றனர்.
சந்தணமடு ஆற்று வீதி முழுமையாக வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகின்ற காலப்பகுதிகளில் பயன்படுத்த முடியாததெனினும், சாதாரண காலங்களில் கூட பயன்பாட்டிற்கு உதவாத முறையில் உள்ளது. சிறியளவில் மழை பெய்தால் அம்மழைநீர் தேங்கி நிற்பதுடன், அவ்வீதி சேறும் சகதியும் நிறைந்ததுமாக மாற்றமடைகின்றது. அத்துடன் இவ்வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருந்த நீர்ப்பாய்ச்சல் மதகுகள் கூட உடைந்து தூர்ந்துபோயுள்ளது.
வீதிகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதனால் இவ்வீதியைப் பயன்படுத்துகின்ற விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக வயலில் வேலை செய்து விட்டு கழைப்புடன் வருகின்றவர்கள், இவ்வீதியின்மீது பயணம்செய்யும்போது வீதியுடன் மிகவும் போராடியே சைக்கிளை செலுத்தி வரவேண்டி ஏற்படுகின்றது. அத்துடன் அதிகாலைவேளைகளில் தமது வயல்நிலங்களை நோக்கிச் செல்கின்றவேளைகளில் வீதியில் உள்ள குழிகளில் விழுந்து செல்லவும் நேரிடுகின்றது.
கிராமப் பிரதேசங்களை விருத்தி செய்வதற்கு பல திட்டங்கள் இன்று அரசினால் கொண்டுவரப்படுகின்றது. பல இடங்களில் கொங்கிறீட் வீதிகள், காபட் வீதிகள் போடப்படுகின்றன. ஆனால் மிகவும் அத்தியாவசியமான ஒரு வீதியான இச்சந்தணமடு ஆற்று வீதியை புனரமைப்பார் யாருமில்லை என சித்தாண்டி பிரதேச விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.