60 அடி உயரமாக இரு மரங்கள் திடீரென நிலத்துக்குள் புதையுண்ட சம்பவமொன்று மலையகத்தில் இடம்பெற்றுள்ளது. மாத்தளை, துங்கொலவத்த, தொரகும்புர பகுதியிலேயே இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பலா மரமொன்றும் கித்துல் மரமொன்றுமே இவ்வாறு திடீரென நிலத்துக்குள் புதையுண்டுள்ளன.
இவ்வாறு மரங்கள் புதைந்த பகுதியில் சுமார் 25 அடி விட்டம் கொண்ட பாரிய குழியொன்று தோன்றியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் மாத்தளை மாவட்ட புவிச்சரிதவியலாளர் எம்.சீ.யூ.பீ.மொரேமட தெரிவித்தார்.
கடந்த 2005ஆம் ஆண்டிலும் இந்த இடத்தின் சில பகுதிகள் இவ்வாறு புதையுண்டன. அக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் போது நிலத்துக்கு கீழுள்ள சுண்ணாம்புக் கற்கள் நிரந்தரமாக கரைந்து போனமையினாலேயே இவ்வாறு நிலங்கள் புதையுண்டன என கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களிலும் இப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அவர் எதிர்வு கூறினார்.