அம்பாறை நில அதிர்வுக்கான காரணம் தெரியவில்லை!- புவிச் சரிதவியல் பணியகம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் ஏற்படும் நில அதிர்வுகளுக்கான காரணத்தை கண்டறிவதற்காக அந்த பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இதுவரை அவற்றுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கூறுகின்றது.

தமன, வடினகால உட்பட 30 கிலோ மீற்றர் பிரதேசத்திற்கு உட்பட்ட 6 கிராமங்களிலேயே இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி என்.பி.வி.விஜயானந்த பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.
காரணத்தை கண்டறிவதற்காக புவி அதிர்வு கணிப்பு பொறிகள் அந்த பகுதியில் பொருத்தபட்டு, நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவொன்று அந்த பகுதியில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
சிறிய அளவில் தொடர்ந்தும் அந்த பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டாலும் பெரும்பாலனவை ஆய்வு மையங்களில் பதிவாகவில்லை.
இதுவரை இரண்டு தடவைகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அது மட்டுமல்ல மூன்று சனிக்கிழமைகளில் தொடர்ந்தும் பகல் நேரம் நில அதிர்வு அந்த பகுதியில் உணரப்பட்டுள்ளதாகவும் கூறும் அவர், மனித செயற்பாடுகள் அல்லது இயற்கை நிகழ்வு இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்.
அனுபவ ரீதியாக நோக்கும் போது மனித செயல்பாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகித்தாலும் அவை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சில வாரங்களுக்கு முன்பு கொழும்பிலும் இவ்வாறு சிறிய அளவில் ஒரு அதிர்வு உணரப்பட்டது என்றும் பின்னர் அது துறைமுக அபிவிருத்தி நடவடிக்கையின் போதே ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் உணரப்படும் நில அதிர்வு மாதுறு ஓயா வனப் பிரதேசதிலேயே ஏற்படுதாக அறியப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் சென்று ஆய்வுகள் மேற்கொள்ள வன ஜீவராசிகள் துறை மற்றும் பாதுகாப்பு துறை உட்பட சம்பந்தப்பட்ட துறையினரின் ஒத்துழைப்பை நாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
Previous Post Next Post