தரையின் கீழிருக்கும் நீரானது இயற்கையாகத் தரையின் மேல் பாயும்போது அல்லது தேங்கும்போது அதனை நீரூற்று என்கின்றோம். நீரூற்றானது மலையின் சாய்வுகளிலோ அல்லது பள்ளத்தாக்கின் தாழ்பகுதிகளிலோ அல்லது வழமையான நீர்மட்டத்தை விட தாழ்ந்த பகுதிகள் பள்ளமாக்கப்படும்போதோ இயற்கையாக தோன்றுகின்றது. நீரூற்றுக்கள் நீரியல் வட்டத்தில் இடம்பெறுகின்ற செயன்முறைகளுள் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது.
மருதயடி நீரூற்று அறிமுகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முறக்கொட்டான்சேனைப் பகுதியிலேயே இந்த மருதயடி நீரூற்று அமைந்துள்ளது. இதனுடைய தனிஅமைவிடமானது வடஅகலாங்கு அண்ணளவாக 7o 49i ஆகவும், கிழக்கு நெட்டாங்கு 81o 33i ஆகவும் காணப்படுகின்றது. இந்த மருதயடி நீரூற்று வாழைச்சேனை வாவியில் சங்கமிக்கும் முறக்கொட்டான்சேனை ஆறிற்கும், A 15 பிரதானவீதிக்கும் இடையிலுள்ள பகுதியில், பாடசாலைக்கு வடக்கேயும் ஆற்றங்கரை ஓரமாகவும் அமைந்துள்ளது. நீரூற்றானது மருத மரம் ஒன்றின் அடிவாரத்தில் இருந்து உற்பத்தியாகி அதன் நீர் ஆற்றில் ஓடிச் சேர்கிறது..
மருத மரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதனால் இதனை மருதயடி நீரூற்று என கிராம மக்கள் அழைக்கின்றனர். இந்நீரூற்றினை ஆரம்ப காலத்திலேயே அடையாளப்படுத்தியவர்கள் அதன் உருவாக்கப்பகுதியை சுற்றி சிறிய கிணறு போன்று சீமெந்து மற்றும் கற்களைக் கொண்டு கட்டியுள்ளனர். நீரானது ஊற்றிலிருந்து நிரம்பி வழிந்து ஆற்றங்கரையை நோக்கிய சிறிய தூரம் ஓடி ஆறுடன் சேர்வதனையும் அவதானிக்கலாம். மற்றும் பிரதேச இளைஞாகள்; தமது ஓய்வுநேரங்களில் இந்நீரூற்றில் வந்து நீராடியும் செல்கின்றனர்..
மருதயடி நீரூற்றின் உருவாக்கம் :-
மருதயடி நீரூற்றானது சாய்வு நீரூற்று வகையைச் சேர்ந்த ஓர் நீரூற்றாகும். நீரூற்று அமைநதுள்ள பிரதேசம் ஆ;றங்கரையை நோக்கிய சாய்வினைக் கொண்ட பிரதேசமாகவுள்ளது. குறிப்பாக பிரதான வீதிக்கருகாமையில் கடல்மட்டத்தில் இருந்து 9 மீற்றர் உயரமும் அது ஆற்றங்கரையை அடைகின்றபோது 7 மீற்றர் உயரத்தையும் கொண்டதாகவும் உள்ளது. இவற்றைவிட வீதிக்கு மறுப்பக்கத்தில் உள்ள பிரதேசங்கள் கடல்மட்டத்தில் இருந்து 8 மீற்றர் உயரத்தை கொண்டனவாக உள்ளன. பிரதேசத்தினைப் பொறுத்தவரையில் அண்மைக்கால மணல் மண் படை மேற்படையாக அமைந்திருக்கின்போதும் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் களிசார்ந்த வண்டல்மண்படை காணப்படுகின்றது. எனவே இப்பகுதியில் மண்படைக்கு கீழே கழி அல்லது கடின பாறைப்படை உபநீர்தாங்குபடுக்கையை ஏந்தியதாககக் காணப்படக்கூடும்.
பிரதேசத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சி நீரை உட்புகவிடக்கூடிய மணல்மண் மேற்படையாக இரப்பதனால் இலகுவில் தரைக்கீழ் நீர்க்கசிவாக கீழிறங்குகின்றது. இவ்வாறு கீழிறங்கிய நீர் ஆற்றில் கலப்பதற்காக தரைக்கீழ் நீராக கீழே நகர்கின்றது. இவ்வாறு நகர்கின்றபோது ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள சாய்வுப் பகுதியில் ஊற்றாக வெளியே தெரிகின்றது.
இவ்வாறு ஊற்றாக வெளிவந்து அதன் சலிப்படைந்த ஊற்றுநீர் சிறிய ஓடையினூடான சுமார் 5 மீற்றர் தூரம் ஓடிச் சென்று ஆற்றினை அடைகின்றது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருதயடிநீரூற்றும் ஒரு நீரூற்றின் உருவாக்கச் செயன்முறையுடன் இணைந்துள்ளதனை அவதானிக்கலாம்.