தமிழர்களின் வறட்சி கால நீர் சேமிப்பு முறை..ஊருணி

தமிழனின் வறட்சி கால நீர் சேமிப்பு முறை...ஊருணி



இனி வரும் காலங்களில் வறட்சியை சமாளிக்க தமிழர்களின் பழமையான நீர் சேமிப்பு முறையை பரவலாக தமிழ்நாட்டில்  அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த  முற்படவேண்டும். 
தமிழ்நாட்டில் மழைப்பொழிவு குறைவான வறண்ட மாவட்டங்களிலும்  குறிப்பாக ராமநாதபுரம், மாவட்டத்தில் இப்பண்டைய கால நீர் சேமிப்பு முறை மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதன் பெயர் "ஊரணி" (ஊருணி)


#ஊருணி_நீர்நிறைந்_தற்றே_உலகவாம்
#பேரறி_வாளன்_திரு
(#குறள்-215)

The wealth that wise and kind do make is like water that fills like a lake  
(kural-215)
விளக்கம் :
(பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்)
 2000 வருடங்களுக்கு முன்பே ஐயன் வள்ளுவர் ஊருணியின் பெருமைபாடிவிட்டார் ...

ஊருணி_என்றால்_என்ன?


ஊருணி=ஊர்+உண்+இ
(ஊரார் நீர் உண்ணும் நிலை)
"ஊருணி" அல்லது "ஊரணி"

ஊரணி என்பது மழைப்பெழிவுக்காலங்களில் பள்ளம் நோக்கி ஓடும் மழை நீரை தேக்க பொது வெளியில் குளம் போன்று
தோண்டி வறட்சி காலங்களில் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு  அமைப்பாகும். 
ஊருணி என்பது ஊறும் நிலத்தடி நீரைக் கொண்டதல்ல ,மழை நீரைக் கொண்டது. 
அதாவது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்(RAIN WATER HARVESTING) ஒரு பெரும் நிலப்பரப்பில் பொழியும் மழை நீரைச் சேமித்து ஊருணிக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதற்கு ஏற்றார்போல ஊருணி இருக்கும் இடத்தைத்  தேர்ந்தெடுக்கவேண்டும். மழை நீர் ஓடிவந்து சேரும் பாதைகளை உருவாக்கவேண்டும்.
 சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம்மழைநீர் சேகரிப்பு முறை கையாளப்பட்டு வருகிறது.
ஊருணியின் வடிவமைப்பானது அப்பகுதியின் மழை பொழிவின் அளவு, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்த் தேவை இது  போன்ற விவரங்களை உள்ளடக்கியது அதை பொறுத்தே  அதன்  ஆழம், நீள, அகலங்கள்  வடிவமைக்க பட்டிருக்கும்
ஊருணியில் ஓரிடத்தில் கிணறு ஒன்றும் அமைக்கபட்டிருக்கும்  . மழைபொழிவு குறைவாக இருக்கும்போது ஊருணி வற்றிவிட்டாலும் அந்தக் கிணறிலிருந்து நீர் கிடைக்கும். 

வறட்சி காலங்களில்,  விளைநிலங்களுக்கான பாசனத்திற்கும் , மக்களின் குடிநீர் தட்டுப்பாடு போன்ற அத்தியாவசியமான பிரச்சினைகளுக்கும், மேலும் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க என பல்வகை நோக்கிற்காக உருவாக்கப்பட்டவை, 
அவற்றில் பல இன்று கைவிடப்பட்டும், பயன்படுத்த இயலாத நிலையிலும் உள்ளன.
முறையாக அமைக்கப்பட்ட இந்த ஊரணிகள்  பருவமழை காலங்களில் மழைநீர்  சேகரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஏதுவானதாகிறது. 
இதனால்  விளைநிலங்களுக்கு , நீர் பாசனத்திற்கான செலவும், குடிநீருக்காக அவதிகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீருக்காக  பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஊரணியிலிருந்து எடுக்கப்படும் நீரானது கலங்களாகவும் சற்று சேறு கலந்ததுமாக இருக்கும்இதை சுத்தப்படுத்தவும் இயற்கையான வழியே கையாளப்பட்டு வருகிறது,




மண்பானையில்  #தேத்தாங்கொட்டை (#strychnos_potatorum)
கொண்டு பானையின் உட்புறம் தேய்கப்பட்டு நீர் நிரப்பப்படும் சில மணி நேரங்களுக்குள் பயன்பாட்டுக்கு ஏதுவான தெளிவான நீர் கிடைக்கபெறும்.

ஆனால் தற்போது இராமநாதபுரம் போன்று சில மாவட்டங்களில்  மானியம் வழங்கப்படுவதால், நவீன மயத்து டன் அவர்அவர் தேவைக்கு  ஏற்ப சிறிய அளவிலான நீர் சேமிப்பு கிடங்கு அமைத்து கொள்கின்றனர்.


இதே போன்று இந்தியாவில்  வறட்சியான இடங்களிஇல் நீர் பற்றாக்குறையை சமாளிக்க பல வழிகள் கையாளப்பட்டு வருகிறது 



மேலும் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும்
 நீர் நிலைகள் பல 

அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
கடல் (Sea) - சமுத்திரம்.
கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
கால் (Channel) - நீரோடும் வழி.
கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.


கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம்.ஆவி என்றும் கூறப்படும்.
பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.





இயற்கையைப் பாதுகாப்பதில் நமது மூதாதையர்களுக்கு முரணாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். 
அனைவரும் தனி மனித ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் , இயற்கை மீதான ஒரு விழிப்புணர்வு, ஒரு பற்று,ஒரு ஆர்வம்  அனைவருக்கும் வேண்டும்,
வளத்தை அழித்து, தமக்குச் சொந்தம் அற்ற நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்யும் இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோமானாவை எனத் தெரிந்துகொண்டும், பலர் அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர். இயற்கையை உதாசீனப்படுத்தத் தொடங்கியதிலிருந்து ஏராளமான அழிவுகளை நாம் சந்தித்தும், அவற்றிலிருந்து 
நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவே இல்லை. 
இயற்கையாகக் கிடைத்த ஏராளமான செல்வங்களை  இழந்து விட்டோம்......


 நீரை சேமிப்போம்..!! 
சுற்றுச்சூழலைக் காப்போம்…!!! 
வரும் தலைமுறைக்கு வளமான
 சூழலைத் உருவாக்குவோம்.!!!
இயற்கையை போற்றுவோம் .
Previous Post Next Post