புதையல்களை பூதங்கள் பாதுகாக்கின்றதா? கிழக்கில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதித்தமிழரின் அதிசய பூமி!

வரலாற்றை தேடும் பணியில் இம்முறை கிழக்கிலங்கையின் மையப்பகுதியான மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலத்தில் காணப்படும் தமிழர்களின் வரலாற்றை கொண்ட பல வரலாற்று ஆவணங்கள் புதைந்து கிடக்கும் குசலானமலை குமரன் ஆலயத்தை தேடி சென்றிருந்தோம்.
கரடியணாறு கிராமத்துக்கு வடபுறம் உள்ள அழகிய மலை கிராமம் அது. 2000 வருடங்களுக்கு முன் இங்கு ஆதித்தமிழர்கள் வாழ்ந்ததற்கான தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அங்கு வாழ்ந்த தமிழர்களின் வேல் வழிபாடும் நாக வழிபாடும் இருந்ததற்கான தடயங்கள் ஆதாரங்கள் நிறையவே அங்கு உள்ளன.

மட்டக்களப்பில் தமிழரின் வரலாற்றை பேசும் குசலானமலை முருகன் ஆலயம்!
கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஏறாவூர் பற்று பிரதேச சபையிலுள்ள இந்தியாவின் பழனிமலை போன்ற முருகனின் திருத்தலம்(கரடியனாறு குசலானமலை)
இலங்கையில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த மலையொன்று இன்றும் உள்ளது. குசலான் மலை என்று அதற்குப் பெயர்.
இம்மலை தாந்தாமலை பிள்ளையார் ஆலயத்தையும் உகந்தமலை வள்ளிஅம்மனாலயத்தையும் நினைவுபடுத்துகின்றது.
உகந்தமலையைப் போல குசலான்மலை சுமார் 250அடி உயரமுடைய தட்டையான அமைப்புடைய குன்றாகும். 200அடி நீளமும் 100அடி அகலமும் உடைய இக்குன்றில் சுனைகள் பத்துக்கும் மேற்பட்ட குகைகள் காணப்படுகின்றன. படிக்கற்கள் காணப்படுகின்றன.
குசலானமலை பற்றிய அப் பிரதேச மக்களின் கருத்துக்கள்!
குசலானமலைப் பற்றிய ஆரம்பம் சுமார் முப்பது தலைமுறைகளாக ( சுமார் 2000 வருடங்களுக்கு முதல் ) காணப்படுகின்றதாம். 30 தலைமுறைகள் என குறிப்பிடப்படுகின்றமைக்கு காரணம் இம் மலை மீது முருக வழிபாடு சுமார் 30 தலைமுறைகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையே ஆகும்.
இம் மலையில் மனிதனுக்கு தென்படாத பல வகையான மர்மமான விடயங்கள் காணப்படுகின்றதாம். அவை தற்போதும் இம் மலையில் பூதங்கள் புதையல்களை பாதுகாத்துக் கொண்டு வாழ்வதாவும் இம் மலையில் கண்ணுக்கு புலப்படாத குகை காணப்படுவதாவும் அத்துடன் வேடுவ இனத்தர்கள் மலையின் ஒரு பகுதியில் வாழ்வதாகவும் முற்காலத்தில் வாழந்த மன்னன் ஒருவன் மலையினை ஒளிந்து வாழ்வதற்காக பயன்படுத்தியதாகவும் அத்துடன் இங்கு காணப்படும் முருகன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் குறிப்பிடுகின்றனர்.
இப் பகுதியில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளும் காலத்தில் இம் மலையில் புதையல்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் பூதங்கள் முற்றிய நெல்களைக் கொண்டு இம் மலை மீது வைத்து தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்துக் கொள்ளுமாம் இச் சம்பத்தினை இங்கு வாழும் மக்கள் நேரடியாக பார்வையிடத போதிலும் இச் சம்பங்கள் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இம் மலைப் பகுதில் காணலாம் குறிப்பிடுகின்றனர்.
குசலான மலையில் புதையல்கள் அகழந்தொடுக்கப்பட்டமைக்கு சான்றாக இங்கு தோண்டப்பட்ட கிடங்குகள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது அவற்றினுள் புற்கள் வளர்ந்து பற்றையாக காட்சியளிக்கின்றன.
இவ் ஆய்வுப் பயணத்தை மேற்கொள்ளும் போது மலை அடிவாரத்தில் வசிக்கின்ற மக்கள் நண்பகல் வேளையில் 'வேடுவ' இனத்தைச் சேரந்தவர்கள் இக் கோவிலுக்கு வந்து இங்கு குடிகொண்டிருக்கும் இறைவனை வணங்கி பூசைகளை மேற்கொள்வதாகவும் இவ்வின மக்கள் ஆரம்பத்திலிருந்து இங்கு காணப்படும் இறைவனை 'குமாரத் தெய்வம்' என்கின்ற வடிமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.
சிறப்பம்சங்கள்!
அங்கு பத்துக்கும் மேற்பட்ட குகைகள் உள்ளன. அவற்றில் ஆதி தமிழர் வாழ்ந்த எச்சங்கள் காணப்படுகின்றன. அங்கு 07 ஆதிதமிழரின் தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் உள்ளதாக பிரபல தொல்லியலாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் குறிப்பிடுகின்றார்.
புராதன கட்டடமொன்று காணப்பட்டதற்கான பழைய செங்கற்கள் அங்கு காணப்படுகின்றன. இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த புதையல்கள் திரவியங்கள் புதையல்மீட்புக்காரர்களால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திசன் பெருமகன் தேவகுத்தன் அபயன் நாகன் சுதசனன் குத்தன் சுதினன் சமனன் கஹபதி போன்ற ஆதித் தமிழ்ப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இங்கு ஆதி தமிழர்கள் வணங்கிய குலதெய்வம் வாழ்ந்த குகைகளையும் ஒரு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சக பௌத்தர்களிடம் வழங்கியதாக பிராமி எழுத்துக்களில் கல்வெட்டுக்களில் பொறித்துள்ளனர்.
குசலான் எங்கே அமைந்துள்ளது?
மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதனவீதியில் 14கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனுமிடமுள்ளது. அங்குள்ள பிரதான சந்தி கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்தது.
அந்தச்சந்தியிலிருந்து மேற்காக கறுத்தபாலமூடாக மகாஓயா செல்லும் வீதியில் 13 கி.மீற்றர் தொலைவில் கரடியனாறு எனும் பழந்தமிழ்க்கிராமம் உள்ளது. இக்கிராமத்திலின் வடமேற்குத்திசையில் 3கி.மீற்றர் தூரத்தில் குசலான்மலை அமைந்துள்ளது.
இம்மலை உச்சியில் பண்டைய காலத்து வேல் தாங்கிய சிறுகோயில் இருந்தது.
இந்தக்குசலான் மலைக்கும் அருகிலுள்ள 7 சிறுகுன்றுகளுக்கும் மத்தியில்தான் கரடியனாறுக்குளம் இயற்கையாக அமைந்துள்ளது. முந்தெனி ஆற்றால் இக் கரடியனாறுக்குளம் இயற்கையாக உருவாகியதென்பது தெரிந்த விடயமே.
1948இல் இக்குளத்தின் அருகில் அணைக்கட்டுக்கள் கட்டி நீர்த்தேக்கமாகியது.
குசலான் மலையில் வேல் நாக வழிபாடு!
2000 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்த தமிழர்களின் வேல் வழிபாடும் நாக வழிபாடும் இருந்ததற்கான தடயங்கள் ஆதாரங்கள் நிறையவே உள்ளன. அங்கு நாகநாதருக்கு பூஜைசெய்த இடங்களை இன்றும் காணலாம். மலையடியில் கொத்துப்பந்தல் அமைத்து பொங்கலிட்டு இவ்வழிபாட்டைச் செய்துள்ளனர். இன்றும் பாம்புப்புற்றைக்காணலாம்.
அன்று கரடியனாற்றில் விவசாயம் செய்துவந்த தமிழ்மக்கள் வேல் வழிபாட்டையும் நாகவழிபாட்டையும் தொடர்ந்து செய்துவந்தனர்.
அங்கு மலையில் தற்போதுள்ள ஆலயம் 4 சிறு மண்டபங்களைக்கொண்டு காணப்படுகின்றது. இருபக்கங்களிலும் 4தூண்கள் வீதம் 8தூண்கள் காணப்படுகின்றன. கருவறையில் முருகப்பெருமான் வைக்கப்பட்டுள்ளார். கூடவே விநாயகரும் கற்சிலையாக வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் முருகனின் 3 வேலாயுதங்களும் வைக்கப்பட்டுள்ளன.
வருடாந்த திருவிழா!
இத்தனை சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மலையின் மீது இயற்கை அழகுடன் தமிழர்களின் பாரம்பரியத்தினையும் சுமந்ததாக காணப்படும் குசனார் குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலயத்தில் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
ஆலய பரிபாலனசபையினர் கல்லடி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் இணைந்து இந்த சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.குறித்த ஆலயத்தின் மகிமையினையும் அதன் வரலாற்று சிறப்பினையும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்லடி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினரால் கடந்த ஏழு வருடமாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுவதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.
எதிர்வரும் நான்காம் திகதி அதிகாலை 03.00மணியளவில் கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து இந்த பாதயாத்திரை ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
செங்கலடி பிரதேசம் ஊடாக இந்த பாதயாத்திரை செல்லவுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பழமையினையும் பாரம்பரியத்தினையும் நேசிக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
(http://news.ibctamil.com/srilanka/80/105602)


Previous Post Next Post