மாணவனின் மரணம்: அதிபர், ஆசிரியர்கள் கைது

நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை ஆற்றில் மூழ்கி மரணமான சாரண இயக்க மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார், அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களை கைதுசெய்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
 
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தைச் சேர்ந்த பதினைந்து மாணவ குழுவினரை அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்கள் சாரணர் பயிற்சிக்காக  நேற்று காலை 08.30 மணியளவில் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
 
இவ்வாறு சென்ற மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கி மரணமான மாணவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மரணம் தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்றது.

வாழைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 09இல் கல்வி கற்கும் பதுர்தீன் பாயிஸ் (வயது 14) என்றழைக்கப்படும் மாணவரே உயிர் இழந்தவராவார்.
 
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார் - அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் வாழைச்சேனை மாவட்ட நிதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹூஸைன் முன்னிலையில் ஆஜர்படுத்தியதற்கிணங்க இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜர் படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
 
குறித்த மாணவரின் ஜனாஸா விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு  நேற்று இரவு 08.00 மணியளவில் வாழைச்சேனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளி வாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Previous Post Next Post